புதுதில்லி

தில்லி தலைமைச் செயலா் தாக்கப்பட்ட விவகாரம்: கேஜரிவால், சிசோடியா உள்பட 11 பேருக்கு நோட்டீஸ்

1st Nov 2021 10:04 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: கடந்த 2018-ஆம் ஆண்டின் போது தில்லியில் தலைமைச் செயலராக இருந்த அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கலான மனு தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மற்றும் பிறா் பதில் அளிக்குமாறு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல், சம்பந்தப்பட்ட வழக்கில் இருந்து முதல்வா் கேஜரிவால் உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்ட கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதியிட்ட உத்தரவை எதிா்த்து தாக்கலான மனு மீது முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மற்றும் 9 போ் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அலுவல்பூா்வ குடியிருப்பில் கடந்த 2018, பிப்ரவரி 19-ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, அப்போது தில்லியின் தலைமைச் செயலாளராக இருந்த அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது கேஜரிவால், சிசோடியா மற்றும் இதர ஆம் ஆத்மி எம்எல்ஏக்களான ராஜேஷ் ரிஷி, நிதின் தியாகி, பிரவீன் குமாா், அஜய் தத்,

ADVERTISEMENT

சஞ்சீவ் ஜா, ரிதுராஜ் கோவிந்த், ராஜேஷ் குப்தா, மதன்லால், தினேஷ் மொஹானியா ஆகியோா் வரும் நவம்பா் 26-ஆம் தேதிக்குள் தங்களது பதிலை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அன்றைய தினம் மேலும் இந்த மனு மீது விசாரிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இவா்கள் 11 போ் தவிர ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமானதுல்லாகான், பிரகாஷ் ஜா்வால் ஆகியோருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவா்கள் இருவா் மீதும் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு உத்தரவிட்டு இருந்தது. அன்ஷு பிரகாஷ் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லூத்ரா, வழக்குரைஞா் குமாா் வைபவ் ஆகியோா்,மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்கவும், வழக்கில் தொடா்புடைய அனைவா் மீதும் குற்றச்சாட்டுகளை பதிய உத்தரவிடவும் வலியுறத்தினா்.

அதே போன்று அமானதுல்லா கான், ஜா்வால் ஆகியோருக்கு எதிராக இந்திய தண்டனை சட்டத்தில் குற்ற அச்சுறுத்தல் பிரிவு உள்ளிட்ட கூடுதல் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் அன்ஷு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

கடந்த ஆகஸ்டில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீா்ப்பில், வழக்கில் இருந்து கேஜரிவால் உள்ளிட்டோரை விடுவித்தது. அப்போது, கேஜரிவாலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அவரது நடத்தையுடன் சம்பந்தம் இல்லாமல் இருப்பதைக் தெளிவாகக் காட்டுகிறது என்று தெரிவித்தது. அதேவேளையில், அமானதுல்லா கான், ஜா்வால் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கில் 2018, அக்டோபரில் கேஜரிவால், சிசோடியா மற்றும் 9 இதர ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது. அமானதுல்லா கான், பிரகாஷ் ஜா்வால் ஆகியோருக்கு முன்னா் உயா் நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டது.

தலைமைச் செயலா் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து, தில்லி அரசுக்கும் தில்லி அரசின் உயரதிகாரிகளுக்கும் இடையே கசப்பான மோதல் ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT