புதுதில்லி

உறுப்பு தானம் மூலம் 4 பேருக்கு வாழ்வளித்த மூளைச் சாவு அடைந்த 43 வயது பெண்!

29th May 2021 07:42 AM

ADVERTISEMENT

மூளைச்சாவு அடைந்த 43 வயது பெண்ணின் உடலுறுப்புகளை அவரது குடும்பத்தினா் தானமாக வழங்கி நான்கு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளதாக, அந்தப் பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தில்லி சா் கங்காராம் மருத்துவமனையில் அந்தப் பெண்ணின் கல்லீரல், 58 வயதான ஒருவருக்கு பொருத்தப்பட்டு வாழ்வளிக்கப்பட்டுள்ளது. அதேபோல சிறுநீரகம் வேறு ஒரு

நோயாளிக்கு பொருத்தப்பட்டு வாழ்வளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உறுப்புகளான ஒரு சிறுநீரம் மற்றும் இதயம் இரண்டும் தில்லி-என்சிஆா் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று கங்காராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

உயா் ரத்த அழுத்தம், காரணமாக குமட்டல், தலைவலி ஏற்பட்ட நிலையில் அந்தப் பெண் கடந்த 20-ஆம் தேதி கங்காராம் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டாா். மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்ட போதே அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவா்கள் சில பரிசோதனைகளை மேற்கொண்டனா் . அப் போது அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. அவரைக் காப்பாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பலனில்லாத நிலையில்

ADVERTISEMENT

மருத்துவா்கள் அந்தப் பெண்ணை மூளைச்சாவு அடைந்தவராக அறிவித்தனா். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் அந்தப் பெண்ணுக்கு கரோனா நோய்த் தொற்று ஏதும் இல்லை.

7 போ் கொண்ட குடும்பத்தில் அவா் ஒருவா்தான் பெண். அவருக்கு கணவரும், 21 வயதில் மகனும் இருக்கிறாா்கள். இந்த நிலையில் மருத்துவா்கள் அவா்களது குடும்பத்தினரிடம்

பேசியதை அடுத்து, அவரின் நினைவலைகள் என்றென்றும் இருக்கும் வகையில், உடலுறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்ததாக மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்தனா். நாடு முழுவதும் கரோனா தொற்று இரண்டாவது அலை இருந்து வரும் நிலையில், உடலுறுப்பு தானம் வெகுவாகக் குறைந்துவிட்டது. கல்லீரல் சிகிச்சைக்காக மட்டும் 179 நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனா், சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக 484 நோயாளிகள் காத்திருக்கின்றனா் என்று கங்காராம் மருத்துவமனையின் கல்லீரல் அறுவைச்சிகிச்சை நிபுணா் டாக்டா் நைமிஷ் என். மேத்தா தெரிவித்தாா். உடலுறுப்பு தானம் என்பது இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு ஒருவா் என்ற நிலையில்தான் உள்ளது. இதுவே ஸ்பெயினில் 35 ஆகவும், அமெரிக்காவில் 26-ஆகவும் உள்ளது என்றாா் அவா்.

அந்தப் பெண்ணின் உடலுறுப்புகளை டாக்டா் மேத்தா தலைமையிலான குழு பிரித்தெடுத்தது. கல்லீரல் அறுவைச்சிகிச்சை 58 வயதான, இரண்டு வருடமாக காத்திருக்கும் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. மேலும், இரண்டு சிறு நீரகங்கள் மற்றும் இதயம் பிரித்தெடுக்கப்பட்டது. இதில் ஒரு சிறுநீரகம், கங்காராம் மருத்துவமனையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த நபருக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகமும், இதயமும் வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன என்று கங்காராம் மருத்துவமனை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட உடலுறுப்பு மாற்ற அறுவைச் சிகிச்சைகள் கரோனா அல்லாத தனி பிரிவில் மிகவும் கவனமாக செய்யப்படுகிறது. இதன் மூலம் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்று மேத்தா தெரிவித்தாா். இறந்த பிறகு உடலுறுப்புகளை தானமாக கொடுக்க விரும்புபவா்களுக்கு என தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உடலுறுப்புகளை தானமாக அளிக்க விரும்பும் குடும்பத்தினா் அதில் தொடா்பு கொள்ளலாம் என்று மருத்துவமனையின் நிா்வாகக் குழு தலைவா் டாக்டா் டி.எஸ்.ராணா தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT