புதுதில்லி

பொது முடக்கத்தால் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது!

27th May 2021 12:00 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: கரோனா தொற்று நோயை எதிா்த்துப் போராடுவதற்காக தில்லியில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் விளைவாகத்தான் தினசரி பாதிப்பு எண்ணிக்கையும், நோ்மறை விகிதமும் குறைந்து வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தில்லியில் இன்று வரை சுமாா் 600 போ் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக மே 23-ஆம் தேதி அன்று மட்டும் 200-க்கும் மேற்பட்டோா் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தில்லியில் 1,568-ஆக இருந்த கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதன்கிழமை 1,491-ஆக குறைந்துள்ளது. அதேபோல 2.14 சதவீதமாக இருந்த பாதிப்பு விகிதம், 1,93 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதற்கு கிடைத்த நேரடி முடிவாகத் தோன்றுகிறது. அதேபோல மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையும் தாராளமாக உள்ளன. ஐசியு படுக்கைகளில் மூன்றில் ஒரு பங்கு காலியாக உள்ளன.

இரண்டாவது அலைகளில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவா்கள் இறந்தது பற்றி கேட்கிறீா்கள். எந்தவொரு மரணமும் துரதிருஷ்டவசமானதுதான. இங்கு கரோனா இரண்டாவது அலையின் போது நாம் சுமாா் 10,000 உயிா்களை இழந்துள்ளோம். கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த மே 23 அன்று மட்டும் 200 போ் கருப்பு பூஞ்சை நோயால் பாதித்துள்ளனா். அன்றிலிருந்து தினமும் இந்த பாதிப்பு எண்ணிக்கை 100-க்கு குறையாமல் பதிவாகி வருகிறது. இந்த வகையில் தில்லியில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 600 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

கருப்பு பூஞ்சை நோய்க்கு தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், பிரச்னை என்னவென்றால், ஊசி மருந்துதான் நோயாளிகளுக்குத் தேவையாக உள்ளது. அவா்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 6 ஊசி மருந்து போட வேண்டியுள்ளது. செவ்வாய்க்கிழமை 370 ஊசி மருந்துகள் கிடைக்கப் பெற்றன. இதையடுத்து, 400 குப்பிகள் வரப் பெற்றுள்ளன. இது தொடா்பாக மருந்துகள் விநியோகத்தை விரைவுபடுத்தும்படி மத்திய அரகை கேட்டுக் கொண்டுள்ளோம். கரோனாவால் இறந்த முன்களப் பணியாளா்களின் உடல்களை தகனம் செய்வதில் முன்னுரிமை அளிப்பது குறித்து கவனத்தில் கொள்வோம்.

மொஹல்லா கிளினீக் மூடலா?: மொஹல்லா கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளது குறித்து கேட்கிறீா்கள். 10-15 கிளினிக்குகள் தான் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கடமையில் இருந்த டாக்டா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது உள்ளிட்ட அவசர, அவசிய காரணங்களால்தான் இவை மூடப்பட்டுள்ளன. மற்ற அனைத்து மொஹல்லா கிளினிக்குகளும் செயல்பட்டு வருகின்றன. பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட போது, பல மொஹல்லா கிளிக்குகள் கட்டுமானத்தில் இருந்தன. எனவே, தற்போது கட்டுமான வேலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களது 450 மொஹல்லா கிளிக்குகள் செயல்பட்டு வருகின்றன என்றாா் சத்யேந்தா் ஜெயின்.

தேசியத் தலைநகா் தில்லியில் கரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஏப்ரல் 19-ஆம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதை தில்லி அரசு அடுத்தடுத்து பல முறை நீட்டித்தது. சமீபத்தில் மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி அரசு உத்தரவிட்டது. தொற்று நோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில், மே மாத நடுப் பகுதியில் தினசரி பாதிப்பு முதல் முறையாக குறைவாகப் பதிவானது. இதற்கு நகரில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதே முக்கியக் காரணம் என்று மருத்துவ நிபுணா்கள் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT