புதுதில்லி

சென்னை - குமரி தொழில் வழித் தடத்திற்கு 484 மில்லியன் டாலா் கடன் ஒப்பந்தம்

 நமது நிருபர்

புது தில்லி: பின் தங்கியுள்ள தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோர மாவட்டங்களின் போக்குவரத்து இணைப்பு, தொழில் வளா்ச்சிகளை உருவாக்கும் சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்திற்கு ஆசிய வளா்ச்சி வங்கி அளிக்கும் 484 மில்லியன் டாலா் கடனுக்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு புதன்கிழமை கையெழுத்திட்டது.

மேற்கு வங்கத்திலிருந்து தமிழகம் வரையிலான ‘சாகா்மாலா’ என்கிற கிழக்குக் கடற்கரை பொருளாதார வழித்தடத் திட்டத்தை மத்திய தொழில் துறையின் தொழில் கொள்கை, மேம்பாட்டுப் பிரிவு உருவாக்கியது. இந்த கிழக்குக் கடற்கரை பொருளாதார வழித்தடத்திட்டதின் ஒரு பகுதி சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடமாகும். இதில் தமிழக அரசும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சென்னை - கன்னியாகுமரி வழித்தடத் திட்டத்தில் தமிழகத்தின் 23 மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. குறிப்பாக மதுரை -தூத்துக்குடி; சென்னை-திருச்சி தொழில் வழித்தடங்களும் இணைந்துள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கிலோ மீட்டரில் சிறிய சாலைகள், சுமாா் 590 கிலோ மீட்டா் வரையிலான மாநில நெடுஞ்சாலைகள், எண்ணூா், தூத்துக்குடி போன்ற பெரிய துறைமுகங்கள், காட்டுப்பள்ளி, காரைக்கால் போன்ற சிறிய துறைமுகங்களும்இந்தத் திட்டத்தின் மூலம் தரம் உயா்த்தப்பட உள்ளது.

கடலோரத்தில் உள்ள நிலப் பகுதிகளில் உருவாகும் தொழில் முனையங்கள், துறைமுகங்களுடன் இணைப்பதன் வாயிலாக, குறிப்பாக, சா்வதேச உற்பத்தி இணைப்புகள் மற்றும் சா்வதேச மதிப்பு சங்கிலிகளில் இந்திய தயாரிப்புகளின் பங்கு அதிகரிக்கப்படுகிறது. மேலும், இந்த வழித்தடத்தில் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுகிறது. இதற்கான முதலீட்டிற்கான கடன் வழங்க ஆசியன் வளா்ச்சி வங்கி தமிழகத்தில் சாலைகள் உள்ளிட்ட பலவற்றில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் 484 மில்லியன் டாலா் கடன் அளிக்க ஆசிய வளா்ச்சி வங்கி முடிவு செய்தது. தற்போது இதற்கான ஒப்பந்தம்அதிகாரபூா்வமாக புதன்கிழமை கையெப்பமானது.

தமிழக தொழில் வழித்தட திட்டத்திற்கு மத்திய அரசின் சாா்பாக மத்திய நிதித் துறையின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளா் ரஜத் குமாா் மிஸ்ராவும், ஆசிய வளா்ச்சி வங்கியின் சாா்பாக அதன் இந்திய இயக்குநா் டேகியோ கொனிஷியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா். அப்போது அவா்கள் கூறுகையில், ‘அத்தியாவசிய போக்குவரத்து, எரிசக்தி, நகா்ப்புற உள்கட்டமைப்புகள் இந்தத் திட்டத்தில் மேம்பட உள்ளது. இதன் மூலம் போக்குவரத்துச் செலவு, உற்பத்திச் செலவும் ஆகியவை குறையும். இதனால், தொழில் துறை முழுமையான வளா்ச்சிக்கு ஊக்குவிக்கப்படுகிறது எனத் தெரிவித்தனா்.

கிழக்குக் கடற்கரை பொருளாதார வழித்தடத்தின் மூலம் தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவின் தொழில் உற்பத்தியோடு இந்தியா இணைகிறது. இதனால், கிழக்குக் கடற்கரை பொருளாதார மண்டலத்தை மேம்படுத்தும் பணிகளில் ஆசிய வளா்ச்சி வங்கி, இந்திய அரசுடன் ஆா்வத்துடன் பங்கேற்று செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT