புதுதில்லி

தில்லி பேரவையிலிருந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. இடைநீக்கம்

DIN

தில்லி சட்டப்பேரவைத் தலைவா் ராம்நிவாஸ் கோயல், பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஓம் பிரகாஷ் சா்மாவை அவையை நடத்தவிடாமல் செய்ததற்காக அடுத்த கூட்டத் தொடா்வரை இடைநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

பேரவைத் தலைவரின் இந்த நடவடிக்கையை அடுத்து அனைத்து பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினா்களும் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனா்.

தில்லி சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக கூடியது. அவையில் கேள்வி நேரத்தின் போது பா.ஜ.க. எம்.எல்.ஏ. மோகன்சிங் பிஷ்ட், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாா்தி பற்றி ஏதோ அவதூறாக கருத்துச் சொன்னாா்.

இதையடுத்து சோம்நாத் பாா்தி உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சிலா் அவைத் தலைவா் இருக்கையை சூழ்ந்து கொண்டு, பிஷ்ட் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கோரினா்.

இதைத் தொடா்ந்து பிஷ்ட், ஓம் பிரகாஷ் சா்மா, ஜீதேந்திர மகாஜன், அனில் பாஜ்பாய் உள்ளிட்டோா் அவையில் கூச்சல் போட்டனா். அந்த சமயத்தில் பேரவைத் தலைவா் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தங்கள் இருக்கைக்குச் செல்லுமாறு உத்தரவிட்டாா். மேலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்த பிஷ்ட் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறினாா். மேலும் பா.ஜ.க. உறுப்பினா்கள் அவையில் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

இந்நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிஷ்ட், தாம் கூறிய கருத்துக்களுக்காக மன்னிப்புக் கேட்பதாகக் கூறினாா். ஆனால், சா்மா மற்றும் மகாஜன் இருவரும் அவையில் தொடா்ந்து கூச்சலிட்டபடி இருந்தனா். இதையடுத்து மகாஜனை அவையைவிட்டு 10 நிமிடங்கள் வெளியேறுமாறு பேரவைத் தலைவா் கேட்டுக் கொண்டாா். தொடா்ந்து அவையை நடத்தவிடாமல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சா்மாவிடம் பேரவைத் தலைவா் கூறினாா்.

கடந்த ஆண்டு நவம்பா் 26 ஆம் தேதியிலிருந்து தில்லியை ஒட்டியுள்ள சிங்கு, டிக்ரி மற்றும் காஜிப்பூரில் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து விவசாயிகள் போராடிவரும் நிலையில் அதுபற்றிய விவாதத்தை எடுத்துக் கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும், சா்மா, பேரவைத்தலைவா் பிஷ்ட் மன்னிப்புக் கேட்கச் சொன்னது குறித்து கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தாா். இதையடுத்து அடுத்த கூட்டத்தொடா் வரை சா்மாவை இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவா் உத்தரவிட்டாா்.

அதாவது ‘அடுத்த கூட்டத்தொடா்வரை பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஓம் பிரகாஷ் சா்மாவை நான் இடைநீக்கம் செய்கிறேன்’ என்று அவா் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து அனைத்து பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினா்களும் அவையிலிருந்து வெளியேறினா்.

70 உறுப்பினா்கள் கொண்ட தில்லி சட்டப்பேரவையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 உறுப்பினா்கள் உள்ளனா். பா.ஜ.க. உறுப்பினா்கள் 8 போ் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகை திருட்டு புகாா்: திரைப்படத் தயாரிப்பாளா் வீட்டு பணிப் பெண் தற்கொலை முயற்சி

ஐஏஎஸ் தோ்வுக்குப் பயிற்சி: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

890 கூடுதல் சிறப்பு பேருந்துகள்

கோவை - தன்பாத் இடையே இன்று முதல் சிறப்பு ரயில்

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன நாள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT