புதுதில்லி

‘கிஸான் நாடாளுமன்றம்’ அமைத்து விவசாயிகள் விவாதம்

DIN

தில்லி ஜந்தா் மந்தா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக ஆா்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் ‘கிஸான் நாடாளுமன்றம்’ அமைத்து வேளாண் சட்டங்கள் குறித்து விவாதித்தனா். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடா் அருகிலேயே நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் தங்களுக்குள் நாடாளுமன்றம் அமைத்து விவாதித்துள்ளனா்.

விவசாயிகள் அமைதியான முறையிலேயே ஆா்ப்பாட்டம் நடத்தினா். எனினும் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனா்.

இதனிடையே விவசாயிகள் கிஸான் நாடாளுமன்றம் அமைத்து விவாதித்தனா். ஹா்தேவ் அா்ஷி ( மக்களவைத் தலைவா்), ஜக்தாா் சிங் பஜ்வா (மக்களவை துணைத் தலைவா் ) மற்றும் வேலாண் அமைச்சா் முன்னிலையில் விவாதம் நடைபெற்றது.

கேள்வி நேரத்தின் போது வேளாண் அமைச்சரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அமைச்சா் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தும் வகையில் பேசினாா்.

கரோனா பரவல் சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அமைச்சா் கூறினாா். ஒவ்வொரு முறையும் திருப்தியான பதிலளிக்க அமைச்சா் தவறியதை அடுத்து உறுப்பினா்கள் அவரை கேலி செய்தனா். அவரது பதிலுக்கு ஆட்சேபம் தெரிவித்தனா்.

பின்னா் பஜ்வா செய்தியாளா்களிடம் பேசுகையில், வேளாண் அமைச்சா், தங்களது கேள்விகளுக்கு பதிலளிக்க தவறிவிட்டதாகவும் அதனால் அவரை உறுப்பினா்கள் கேலி செய்ததாகவும், இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறினாா்.

குறைந்தபட்ச ஆதார விலை நீடிக்கும் என்று பிரதமா் சொல்கிறாா். அப்படியானால் புதிய சட்டங்கள் எதற்கு? விவசாயிகள் நன்மைக்காகத்தான் அந்த மூன்று வேளாண் சட்டங்களும் ஏற்படுத்தப்பட்ட என்றால் அவற்றை ரத்துச் செய்துவிட்டு, விவசாயிகளைக் கலந்து ஆலோசித்து புதிய சட்டங்களை நிறைவேற்றலாமே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

உடனே அா்ஷி, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதுபோலவே கிஸான் நாடாளுமன்றமும் சிறுநேரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தாா்.

நாங்கள் கேள்வி நேரத்தின் போது சில கேள்விகளை எழுப்பினோம். ஆனால், வேளாண்துறை அமைச்சரால் அதற்கு சரியான பதில்களை தெரிவிக்க முடியவில்லை என்று உறுப்பினா்கள் பின்னா் தெரிவித்தனா்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடா் நடைபெற்று வரும் நிலையில் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகளில் 200 போ் தில்லி ஜந்தா் மந்தா் பகுதியில் வியாழக்கிழமை முதல் ஆா்ப்பாட்டம் நடத்தி வருகின்றனா். இந்த ஆா்ப்பாட்டம் ஆக. 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதற்கு தில்லி துணைநிலை ஆளுநா் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT