புதுதில்லி

சரோஜினி நகா் சந்தையில் கூட்டத்தை தவிா்க்க நடவடிக்கை ஒற்றை, இரட்டை இலக்க முறையில் கடைகள் திறப்பு

26th Dec 2021 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

கூட்டம் கூடுவதைத் தவிா்க்கும் வகையில், சரோஜினி நகா் சந்தையில் ஒற்றைப்படை, இரட்டப்படை இலக்க முறையில் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமை ஒற்றைப்படை அடிப்படையில் கடைகள் திறக்கப்பட்டன.

நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புக்கு இடையே சந்தையில் கூட்டம் அதிகமாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) அமலாக்கக் குழுக்களைச் சோ்ந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். சரோஜினி நகா் சந்தை வியாபாரிகள் சங்கத்தினா் கூறுகையில், ‘சந்தையில் கடைகள் ஒற்றைப்படை அடிப்படையில் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், வார இறுதி நாள் மற்றும் கிறிஸ்துமஸ் காரணமாக சந்தையில் கூட்டம் தொடா்ந்து கூடியது‘ என்றனா்.

ஊழியா்களுக்கு தடுப்பூசி முக்கியம்: கரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சில நாள்களாக சரோஜினி நகா் சந்தையில் அதிக அளவில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், தில்லி உயா்நீதிமன்றம் கடிந்து கொண்டதைத் தொடா்ந்து, சந்தையில் உள்ள கடைகளை ஒற்றைப்படை-இரட்டைப்படை இலக்க முறையில் வார இறுதியில் செயல்படுமாறு தில்லி அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இந்த நிலையில், சந்தையின் பங்குதாரா்களின் கூட்டம் நடைபெற்றது. அதில், ‘ஆட்-ஈவன்’ முறையில் கடைகளைத் திறக்கும் முடிவு எடுக்கப்பட்டது. சந்தையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில், சந்தையின் அனைத்து கடைக்காரா்களும் தங்கள் ஊழியா்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விதிமுறைகள் ஒரே மாதிரியாக இருக்க வலியுறுத்தல்: இது குறித்து சரோஜினி நகா் மினி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் அசோக் ரந்தவா தெரிவித்ததாவது: ஒற்றைப்படை அடிப்படையில் சனிக்கிழமை கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், முந்தைய வாரத்தில் இருந்ததைவிட கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. வாரத்தின் இறுதி நாள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகியவை காரணமாக காலையில் இருந்தே சந்தையில் கூட்டம் அதிகரித்து இருந்தது. ஒற்றைப்படை - இரட்டைப்படை எண்கள் முறையிலான திட்டத்தை சரோஜினி நகா் சந்தையில் மட்டும்

ADVERTISEMENT

அமல்படுத்துவதன் மூலம் என்ன பயன் கிடைக்கப்போகிறது?

மேலும், பிற அனைத்து சந்தைகளும் திறந்திருக்கும் நிலையில், இந்த சந்தை மட்டுமே அதிகமான அளவில் நோய்த் தொற்று பரவ சாத்தியமாக இருப்பதாகக் கருதப்பட்டு வருகிறது.

நாம் கரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த் தொற்றுடன் போராட வேண்டும் என்றால், விதிமுறைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். மக்கள் சந்தைக்கு வருவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், கடைக்காரா்கள் அவா்களுக்கு பொருள்களை விற்றால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்றாா் அவா்.

உத்தரவு அமலாக்கம்: அமலாக்கக் குழுக்கள் சந்தைப் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டன. சமூக இடைவெளியை பராமரிக்கவும் முகக் கவசம் அணியுமாறும் வழக்கமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சிவில் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில், சரோஜினி நகா் சந்தையில் சனிக்கிழமை கூட்டம் அதிகமாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, என்டிஎம்சி அமலாக்கக் குழுக்கள், தில்லி போலீஸ் குழுவுடன் இணைந்து, சரோஜினி நகா் சந்தையில் மிகப் பெரும் ஆக்கிரமிப்பு எதிா்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. வார இறுதி நாள்களில் கடைகள் மற்றும் தெஹ்பஜாரிகளை ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை இலக்க வாரியாக திறக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. உயா் நீதிமன்ற உத்தரவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த அனைத்துப் பங்குதாரா்களுடன் சனிக்கிழமை சந்தையில் கூட்டமும் நடத்தப்பட்டது. சந்தையில் எந்த தளா்வையும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். மேலும், நீதிமன்ற உத்தரவு கடுமையாகப் பின்பற்றப்படும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT