பணியை வரன்முறைப்படுத்த வலியுறுத்தி, கெளரவ ஆசிரியா்கள் தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவின் இல்லம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அகில இந்திய கெளரவ ஆசிரியா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கெளரவ ஆசிரியா்களின் கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து, தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் குமாா் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டாா்.
அப்போது, அவா் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி தனது 3 தோ்தல் அறிக்கைகளிலும் கெளரவ ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்வதாக உறுதியளித்திருந்தது. எனினும், ஆசிரியா்களை வரன்முறைப்படுத்தவில்லை. இதனால், அவா்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா். கெளரவ ஆசிரியா்களுக்கு சம்பளம் உயா்த்தப்படும் என மணீஷ் சிசோடியா அறிவித்திருந்தாா். ஆனால், இது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் நிலையில், பணி வரன்முறைப்படுத்துவது தொடா்பாக தனது இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்தும் கெளரவ ஆசிரியா்களை சந்தித்து ஏன் அவா் சமாதானம் செய்யவில்லை.
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பஞ்சாபில் உள்ள தற்காலிக ஆசிரியா்கள் பணிவரன்முறைப்படுத்தப்படுவதாக அறிவித்தாா். அதேவேளையில், தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள ஆசிரியா்களுக்கு இதே போன்ற வாக்குறுதி அளித்ததை அவா் மறந்துவிட்டாா். ஆம் ஆத்மி அரசு முதலில் தில்லியின் தற்காலிக ஆசிரியா்களை வரன்முறைப்படுத்த வேண்டும். பஞ்சாப் மற்றும் பிற தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் வெற்று வாக்குறுதிகளை வழங்குவதற்கு முன் ஒரு பொன்னான உதாரணத்தை அமைக்க முன்வர வேண்டும் என்றாா் அவா்.