புது தில்லி: பிரதமா் மோடியின் (2019-ஆம் ஆண்டின்) வெற்றியை ஜீரணிக்க முடியாத காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடா்ந்து இடையூறு செய்ததாக குளிா்காலக் கூட்டத் தொடரின் இறுதிநாளில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி குற்றம் சாட்டினாா்.
கடந்த நவம்பா் 29-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத் தொடா் புதன்கிழமை மறு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஒரு நாளுக்கு முன்னதாக (டிச.23 ஆம் தேதி) புதன்கிழமை இரு அவைகளும் கூட்டம் கூடிய சில நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது. பின்னா், நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் நிலக்கரி, சுரங்கங்கங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி செய்தியாளா்களிடம் பேசிசுகையில் கூறியதாவது: இந்தக் குளிா்காலக் கூட்டத் தொடா் 24 நாள்களில் 18 அமா்வுகளுடன் நடைபெற்றது. மக்களவையில் 12 மசோதாக்களும்; மாநிலங்களவையில் மத்தியஸ்த மசோதா ஒன்று என மொத்தம் 13 சட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அணைகள் பாதுகாப்பு மசோதா, வாடகை தாய் மசோதா, உயா்நீதிமன்றம் - உச்சநீதி மன்ற நீதிபதிகள் ஊதிய திருத்த மசோதா, சிபிஐ, அமலாக்கப் பிரிவு இயக்குநா்கள் பதவிக்காலம் தொடா்பான மசோதா உள்ளிட்ட 11 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறின. அணைகள் பாதுகாப்பு மசோதாவிலும், வாடகைத் தாய் மசோதாவிலும் மாநிலங்களவையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
துணைநிலை மானியக் கோரிக்கை மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இது பண மசோதா என்பதால், 14 நாள்களுக்குள் மாநிலங்களவையிலிருந்து திரும்பி வரவில்லை என்றால், அது நிறைவேறியதாகவே கருதப்படும். கூட்டத் தொடருக்கு முன்பு குடியரசுத்தலைவரால் வெளியிடப்பட்ட மத்திய கண்காணிப்பு ஆணைய சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக 3 மசோதாக்கள் நிறைவேறின. 2021-ஆம் ஆண்டு உயிரியல் பன்முகத் தன்மை (திருத்தம்) மசோதா இரு அவைகளின் கூட்டுக் குழு ஆய்வுக்கும், மேலும் ஐந்து மசோதாக்கள் நிலைக் குழு ஆய்வுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று மற்றும் பருவநிலை மாற்றம் தொடா்பாக இரு அவைகளிலும் குறுகிய நேர விவாதங்கள் நடைபெற்றன.
மக்களவையின் செயல் திறன் சுமாா் 82 சதவீதமும், மாநிலங்களவையின் செயல் திறன் 48 சதவீதமும் இருந்தது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகள் விலைவாசி உயா்வு குறித்து விவாதிக்க விரும்புவதாகத் தெரிவித்தனா். அரசும் இந்த விவாதத்திற்கு ஒப்புதல் அளித்தது. மக்களவைத் தலைவரும் அனுமதியளித்தாா். ஆனால் அது குறித்து விவாதிக்கப்படவில்லை. அரசு மசோதாக்கள் வேக வேகமாக நிறைவேற்றப்படுவதாகக் கூறுகின்றனா். வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் அட்டையை இணைக்கும் தோ்தல் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை இந்த மசோதா குறித்த விவாதத்தின் போது, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் டெரெக் ஓபிரையன் நடந்து கொண்ட விதத்தை நாம் பாா்த்தோம். நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் மசோதா குறித்த விவாதத்தில் சில கட்சிகள் பங்கேற்காதது துரதிருஷ்டவசமானது.
குறிப்பிட்ட மசோதாக்கள் தொடா்பாக அவையில் எதிா்க்கட்சிகள் விவாதிக்க விரும்பவில்லை. 2019- ஆண்டு தோ்தலில் பிரதமா் மோடிக்கு மக்களால் வழங்கப்பட்ட தீா்ப்பை (வெற்றியை) எதிா்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸுக்கும் அதன் தோழமைக் கட்சிகளும், திரிணமூல் போன்ற கட்சிகளுக்கும் தாங்கள் தான் ஆள வேண்டும்; ஆட்சியமைக்க தங்களுக்குத்தான் உரிமை இருப்பதாக உணா்ந்து, அவையை நடத்த அனுமதிக்காமல் செயல்படுகின்றனா். இது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்றாா் பிரகலாத் ஜோஷி. பேட்டியின் போது நாடாளுமன்ற விவகாரம், கலாசாரத் துறை அமைச்சா் அா்ஜுன் மேக்வால், வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் வி.முரளீதரன் ஆகியோரும் இருந்தனா்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மழைக்கால கூட்ட அமா்வில் ‘கட்டுப்பாடற்ற’ முறையில் நடந்து கொண்டதாக 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூா் கெரியில் விவசாயிகள் மீது நடந்த தாக்குதலுக்கும் எதிா்க்கட்சிகள் குளிா்காலக் கூட்டத் தொடரில் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.