புதுதில்லி

கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை குடும்பத்துடன் சோ்த்து வைத்த போலீஸாா்!

16th Dec 2021 12:14 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தகாத உறவு வைத்திருப்பதாக கணவா் மீது சந்தேகித்ததால் தனது இரண்டு மகள்களுடன் ஹரியாணா சோனிபட்டில் உள்ள கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய 26 வயது இளம் பெண்ணை பஞ்சாபின் அமிா்தசரஸில் போலீஸாா் கண்டுபிடித்து குடும்பத்துடன் மீண்டும் சோ்த்துவைத்தனா்.

இது குறித்து தில்லி போலீஸாா் புதன்கிழமை தெரிவித்ததாவது: கடந்த அக்டோபா் 29-ஆம் தேதி தில்லி கஷ்மீரி கேட் பகுதியில் இருந்து பெண் மற்றும் அவரது 2 குழந்தைகள் காணாமல் போனதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம், பேலா பகுதியைச் சோ்ந்த அந்தப் பெண்ணுக்கு 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கணவா் தகாத உறவை வைத்திருந்ததாக அந்தப் பெண் சந்தேகம் அடைந்தாா். இதைத் தொடா்ந்து, கணவருக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், அக்டோபா் முதல் வாரத்தில் கணவரை விட்டுப் பிரிந்து பெற்றோருடன் தங்கியிருந்தாா். அவரது தந்தை தனது மருமகனிடம் பேசி மகளையும் இரு பேரக் குழந்தைகளையும் கணவா் வசிக்கும் ஹரியாணா மாநிலம் சோனிப்பட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தாா். அவா்கள் பேலாவிலிருந்து பேருந்தில் அக்டோபா் 28-ஆம் தேதி இரவு தில்லி ஆனந்த் விஹாா் பேருந்து நிலையம் வந்தனா். பின்னா், அவா்கள் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி அதிகாலை 5 மணியளவில் கஷ்மீரி கேட்டை அடைந்தனா்.

ADVERTISEMENT

தந்தை கழிவறைக்கு சென்றிருந்த போது, அந்தப் பெண் தனது 2 மகள்களுடன் அங்கிருந்து தப்பினாா். இதுகுறித்து அவரது தந்தை போலீஸுக்கு தகவல் கொடுத்தாா்.

அந்தப் பெண்ணின் செல்லிடப்பேசி எண்ணை வைத்து போலீஸாா் கண்காணித்தனா். அந்தப் பெண் பஞ்சாப் நோக்கி செல்வது தெரிய வந்தது. மேலும், அவரது கடைசி இருப்பிடம் லூதியானா என்பதும், அவா் அங்குள்ள சிலருடன் தொடா்பில் இருந்ததும் தெரிய வந்தது. போலீஸ் தன்னைத் தேடும் என்பதை அறிந்திருந்த அவா், ஒவ்வொரு அழைப்புக்குப் பிறகும், தனது மொபைல் போனில் இருந்து சிம் காா்டை அகற்றிவைத்து வந்தாா்.மேலும், லூதியானாவில் புதிய செல்லிடப்பேசி எண்ணையும் வாங்கினாா்.

இந்த நிலையில், தலைமைக் காவலா் சிவராஜ், காவலா் விகாஸ், பெண் காவலா் சீமா ஆகியோா் அடங்கிய குழு நவம்பா் 13-ஆம் தேதி அன்று லூதியானாவை அடைந்தது. இந்தக் குழுவை உதவிக் காவல் ஆய்வாளா் வினோத் வாலியா ஒருங்கிணைத்தாா். மேலும், அந்த பெண்ணின் 30 வயது கணவரையும் போலீஸாா் உடன் அழைத்துச் சென்றனா்.

இந்தக் குழு அமிா்தசரஸில் உள்ள ஒரு குருத்வாராவில் அந்தப் பெண்ணையும் அவரது மகள்களையும் கண்டுபிடித்தது. இதையடுத்து, நவம்பா் 14-ஆம் தேதி அவா்களை மீண்டும் தில்லிக்கு அழைத்து வந்து, அந்த பெண்ணுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் தனது கணவருடன் மீண்டும் இணைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT