புதுதில்லி

அம்பேத்கரின் வாழ்க்கை குறித்த நாடகத்தின் கருப்பொருள் பாடலை வெளியிட்டாா் சிசோடியா

16th Dec 2021 12:19 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: ஜனவரி 5-ஆம் தேதி ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாடகத்தின் கருப்பொருள் பாடலை தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

கல்காஜியில் உள்ள ‘ஸ்பெஷலைஸ்டு ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ்’ வளாகத்தில் நடைபெற்ற விழாவில் இந்தப் பாடலை வெளியிட்டு சிசோடியா பேசியதாவது: பாபா சாகேப் அம்பேத்கா், நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்டவா். அவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட இந்த நாடகம், இந்த 75-ஆவது சுதந்திர ஆண்டில் பாபா சாகேப் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்புக்கு நமது நன்றியைத் தெரிவிக்கும் முயற்சியாகும். தற்போது, ‘இந்தியப் பெருங்கடல்’ இசைக் குழுவுடன் நாடகத்தின் கருப்பொருள் பாடலை வெளியிட்டுள்ளோம்.

இந்தப் பாடல் இசைக்கும் நேரம் 5.30 நிமிடங்கள் ஆகும். வெளிநாடுகளில் பெரும் நாடகங்கள் அல்லது கலைகள் மூலம் சகாப்தங்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது. ஆனால், அதுபோன்ற பெரிய மேடை நாடகம் இதற்கு முன்பு இந்தியாவில் ஒருபோதும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இந்தியாவில் அரவிந்த் கேஜரிவால் அரசால் இந்தப் பாரம்பரியம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நாடகம் மிகவும் பிரம்மாண்டமாகவும் அனைவருக்கும் இலவசமானதாகவும் இருக்கும். அனைவரும் வந்து இந்த நாடகத்தைப் பாா்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.

ADVERTISEMENT

இந்தியப் பெருங்கடல் இசைக்குழு உறுப்பினா்கள் இந்தப் பாடலைப் பாடினா். இந்த மாத தொடக்கத்தில், அம்பேத்கரின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் கேஜரிவால், பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சா்வதேச அளவிலான மேடை நாடகம் ஜனவரி 5-ஆம் தேதி ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தாா். மேலும், சா்வதேச அளவிலான தயாரிப்பில் உள்ள பிரபல நடிகா்களால் இந்த நாடகம் நடத்தப்படும் என்றும் அவா் கூறியிருந்தாா். 100 அடி நீளம் கொண்ட மேடையில் நாடகத்தின் 50 காட்சிகள் நடத்தப்படும் என்றும் அவா் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT