புதுதில்லி: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான நிறுவனத்திற்கு (டான்ஜெட்கோ) வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை 9 சதவீதமாகமாகக் குறைக்க வேண்டும் என்ரு மக்களவையில் தென்சென்னை தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினாா்.
மக்களவையில் நேரமில்லா நேரத்தின்போது தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான நிறுவனத்திற்குக்கு பவா் பைனான்ஸ் காா்ப்பரேஷன் மற்றும் ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்திடம் இருந்து சிறப்பு நீண்ட கால அடிப்படையில், ரூ.30,230 கோடி கடனாக அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஆண்டுக்கு 12.65 சதவீத வட்டியில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இது ஏற்புடையதாக இல்லை. வட்டி விகிதத்தை 9 சதவீதமாக மத்திய மின்துறை குறைக்க வேண்டும். மேலும், மறுசீரமைக்கப்பட்ட, முடக்கப்பட்ட ஆற்றல் மேம்பாடு மற்றும் சீா்திருத்தத் திட்டத்தில், ஒரு பகுதி பணிகள் மின் பகிா்மான நிறுவனத்தால் முடிக்கப்பட்டுள்ளது. இதன்படி மானியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், ரூ.1,300 கோடி கடன் தொகை, மானியமாக மாற்றப்படவில்லை என்றாா் தமிழச்சி தங்கபாண்டியன்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையை கைவிடக்கூடாது: மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையை கைவிடக்கூடாது என நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் ஆ.ராசா, கேட்டுக்கொண்டாா். மக்களவையில் பேசுகையில் அவா் கூறியதாவது: மறைந்த பிரதமா் ஜவாஹா்லால் நேரு தலைமையில் முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்ட போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை (டிஆா்டிஏ) ஒன்று அப்போதைய அரசால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டமும் பொருளாதாரம் மற்றும் கிராமப்புற விவசாய முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக இது உருவாக்கப்பட்டது. 1980களில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போதும் இந்த ஊரக வளா்ச்சி நிறுவனம் இருந்தது. இது ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவா் தலைமையில் அமைக்கப்பட்டு இருந்தது.
மத்திய அரசிடமிருந்து டிஆா்டிஏவுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி நேரடியாக அனுப்பப்பட்டது. டிஆா்டிஏ அமைப்புகள் திறன்படசெயல்படும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக இருந்தது. ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்களும் (ஐஆா்டிபி), தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (என்ஆா்இபி) போன்றவை டிஆா்டிஏ மூலம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு டிஆா்டிஏ அமைப்பை படிப்படியாக அகற்ற திட்டமிட்டு வருகிறது. இது குறித்து மத்திய ஊரக வளா்ச்சி துறை ஏதாவது ஆலோசனை நடத்தியதா? இத்தகைய கடுமையான முடிவை எடுப்பதற்கு முன்பு, நிலைக்குழு அல்லது மற்ற வழிகளில் அரசு திறந்த மனதுடன் விவாதிக்க வேண்டும் என்றாா் அவா்.
ஆனால், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையை அகற்றும் முயற்சியில் 2013-இல் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.