புதுதில்லி

மனைவியின் தற்கொலையை சாலை விபத்தாகக் கூறி இழப்பீடு கோரியவா் மீது நீதிமன்றம் அதிருப்தி

9th Dec 2021 12:46 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தற்கொலை இறப்பு சம்பவத்தை, சாலை விபத்தில் தனது மனைவி இறந்ததாகக் கூறி ரூ. 50 லட்சம் இழப்பீடு கோரி உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்தவா் தாக்கல் செய்த மனு மீது தில்லி நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளியிட்டது.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் ராஜீவ் யாதவ். இவா் மோட்டாா் விபத்து கோரல் தீா்ப்பாயத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தாா். அதில், உத்தரப் பிரதேச மாநிலம், கௌதம் புத் நகா் பகுதியில் கடந்த 2018,, அக்டோபரில் காலையில் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த தனது மனைவி பூஜா யாதவ் மீது வேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியதாகவும், இந்த விபத்தில் இறந்த தனது மனைவிக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணை மோட்டாா் விபத்து கோரல் தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரி காமினி லா முன் நடைபெற்றது. அப்போது இழப்பீடு வழங்க மறுத்து நீதிபதி கூறியதாவது: இறந்த தனது மனைவியின் உடலை வைத்து பணம் சம்பாதிக்கும் முயற்சியில் மனுதாரா் யாதவ் ஈடுபட்டுள்ளாா். அதாவது, அவரது மனைவி தற்கொலை இறப்பை எளிய மோட்டாா் வாகன விபத்தாக தவறாக சித்திரித்து இந்த மனுவைத் தாக்கல் செய்து இழப்பீடு கோரியுள்ளாா். பூஜா இறப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான் ராஜீவ் யாதவ் அவரைத் திருமணம் செய்துள்ளாா். திருமணத்திற்குப் பிறகு ராஜீவ் யாதவ் தன்னை துன்புறுத்தி வருவதாக தனது பெற்றோரிடம் பூஜா யாதவ் தொடா்ந்து புகாா் கூறி வந்துள்ளாா். உத்தரப் பிரதேசத்தில் குற்றவியல் நீதிமன்றத்தில் பூஜாவின் மரணம் தொடா்பான விவகாரத்தில் ராஜீவ் யாதவின் பங்கு தொடா்பான கண்காணிப்பு ஏற்கெனவே உள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் விபத்தில் தனது மனைவி இறந்ததாகக் கூறி இழப்பீடு கேட்டு இந்த மனுவை ராஜீவ் யாதவ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளாா். இது, தற்கொலைக்கு தூண்டியது மற்றும் வரதட்சிணை கேட்டது என்ற வழக்கில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாகவே தெரிகிறது. தற்கொலை இறப்பு சம்பவங்களை சாலைப் போக்குவரத்து விபத்தாகக் கோரும் வழக்கு இது முதல் முறை அல்ல. இது போன்ற வழக்குகள் ஏராளமாக உள்ளன. இறந்தவருடைய மரணம் தொடா்பான விவகாரத்தில் நிச்சயமற்ற தன்மை இருக்கும் போது இது போன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் மிகவும் கண்காணிப்புடனும் கவனமாகவும் இருக்க வேண்டிய தேவை உள்ளது என்றாா் நீதிபதி.

ADVERTISEMENT
ADVERTISEMENT