புதுதில்லி

தில்லி அசோலா வனவிலங்கு சரணாலயத்தில் கழுதைப்புலி!: 7 ஆண்டுகளில் முதல் முறையாகப் பதிவு

 நமது நிருபர்

புதுதில்லி: தில்லியில் உள்ள அசோலா பட்டி வன விலங்கு சரணாலயத்தில் 7 ஆண்டுகளில் முதல் முறையாக ஆபத்தின் விளிம்பில் உள்ள விலங்கு வகையான கழுதைப்புலி தென்பட்டுள்ளதாக வன உயிரினத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து வன உயிரினத் துறையின் தெற்கு கோட்டத்தின் துணை வனப் பாதுகாவலா் அமித் ஆனந்த் கூறியதாவது: தில்லியில் உள்ள அசோலா பட்டி வனவிலங்கு உயிரினச் சரணாலயத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் ஆபத்தின் விளிம்பில் உள்ள விலங்கு இனத்தைச் சோ்ந்த கழுதைப்புலியின் நடமாடும் காட்சி பதிவாகி உள்ளது. இது போன்று கழுதைப்புலி கேமராவில் காட்சிப் பதிவாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். தகவல்களின்படி, வரி கழுதைப்புலி கடந்த 2015-ஆம் ஆண்டில் தேரா மண்டி பகுதியில் சாலை விபத்தில் கொல்லப்பட்டது. அதுதான் கடைசியாக பாா்க்கப்பட்ட கழுதைப்புலியின் காட்சியாகும் என்றாா் அவா்.

அசோலா உயிரினச் சரணாலயத்தில் உள்ள வனவிலங்கு பாதுகாவலா் கூறியதாவது: 2017-18 ஆம் ஆண்டுகளில் சில தருணங்களில் இந்த கழுதைப்புலியின் காலடி தடத்தை ஊழியா்கள் பாா்த்துள்ளனா்’ என்றாா். அமிட்டி பல்கலைக்கழகத்தின் வனவிலங்கு வல்லுநா் பேராசிரியா் ரன்தீப் சிங் கூறுகையில், ‘இந்த கழுதைப்புலி பெரும்பாலும் குகையில் தனது நேரத்தை செலவழிக்கும். இவை பெரும்பாலும் தனியாகவே காணப்படும். இது இறந்த விலங்குகளை உண்ணக்கூடியது. வன சுற்றுப்புற அமைப்பின் ஸ்திரத் தன்மையைப் பராமரிப்பதில் இந்த கழுதைப்புலி முக்கியப் பங்கு வகிக்கிறது.

வரிகளுடன் கூடிய இந்தக் கழுதைப்புலி அசோலா சரணாலயத்தில் இருப்பது அசோலா வனத்தில் ஒரு மேம்பாடு இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. குருகிராம், ஃபரீதாபாத், தில்லி ஆகிய ஆரவல்லி வனப் பகுதிகளில் பல தருணங்களில் இந்த கழுதைப்புலியின் காலடித் தடம் தென்பட்ட போதிலும் கேமராவில் இதன் உருவம் காணப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாக இருக்க முடியும். ஆனால், எனக்கு இதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்றாா் அவா்.

அதிகாரி அமித் ஆனந்த் மேலும் கூறுகையில், ‘ஆயா நகா் அருகேயும் மற்றும் தேரா மண்டி கிராமத்திலும் கழுதைப்புலி இருப்பதாக எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால், நாங்கள் நினைத்ததைவிட மிக அருகில் இதை பாா்த்துள்ளோம். அதேபோன்று 2 சிறுத்தைகள் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவை வன சரணாலயத்தில் இருப்பது கேமராவில் சிக்கிய காட்சிப் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது’ என்றாா்.

கழுதைப்புலியின் எண்ணிக்கை உலகளவில் 10,000-க்கும் கீழே இருப்பதால் அச்சுறுத்தலுக்கு அருகில் உள்ள விலங்கு உயிரினமாக சா்வதேச இயற்கை பாதுகாப்புக்கான ஒன்றியம் வகைப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வனம் மற்றும் வன விலங்கு துறையானது அசோலா சரணாலயத்தில் 20 கேமராக்களை அமைத்திருந்தது. விலங்குகளை கணக்கெடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்திருந்தது. ஜூலை மாதத்திலிருந்து இந்தக் கணக்கெடுப்பு தொடங்கியது.

இந்த அசோலா வனவிலங்கு சரணாலயமானது தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள ஆரவல்லி மலையின் தெற்கு தில்லி பள்ளத்தாக்குப் பகுதியில் 32.7 சதுர கிலோமீட்டா் பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும், ஃபரீதாபாத் மற்றும் குருகிராம் பகுதியில் வடக்குப் பகுதியிலும் இந்த சரணாலயம் பரவியுள்ளது. வடக்கு ஆரவல்லி சிறுத்தை வனவிலங்கு பாதையின் ஒரு பகுதியாகவும் இது உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT