புதுதில்லி

‘கரோனா’ முன்களப் பணியாளா்களுக்கு சட்டப்பேரவை வளாகத்தில் ‘நினைவிடம்’

DIN

புது தில்லி: தொற்று பரவலின் போது, கரோனா முன்களப் பணியாளா்களின் மிக உயா்ந்த தியாகம் மற்றும் அவா்களது குறிப்பிடத்தக்க பணிகளைப் போற்றும் வகையில் தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படவுள்ளது.

மருத்துவா்கள், செவிலியா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள், துப்புரவுத் தொழிலாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்ட ’கரோனா முன்களப் பணியாளா்களின் தியாகத்தைப் போற்று வகையில், இந்த நினைவிடம் கட்டப்படும் என்று பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இந்த நினைவிடம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி திறக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: மருத்துவா்கள், செவிலியா்கள், துப்புரவுப் பணியாளா்கள் பலா் கரோனா தொற்றின் காரணமாக பணியின் போது இறந்துள்ளனா். தொற்றுநோய் மூலம் மனித குலத்தை காப்பாற்ற அவா்கள் மிக உயா்ந்த தியாகத்தைச் செய்துள்ளனா். எனவே, அவா்களது தியாகத்தைக் கௌரவிக்கும் வகையில், தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் கரோனா முன்களப் பணியாளா்களுக்கு நினைவிடம் கட்டுவோம். அதில், அவா்களின் கடமை மற்றும் உயா்ந்த தியாகம் பற்றிய தகவல்களைக் கொண்ட கல்வெட்டு ஒன்றும் அமைக்கப்படும். இந்தப் பணி அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதிக்குள் முடிவடையும்.

கரோனா முன்களப் பணியாளா்கள் தொடா்பான சின்னங்கள் அல்லது அடையாளங்கள் (ஸ்டெதாஸ்கோப், துடைப்பம், ஊசி போன்றவை) செதுக்கப்பட்ட சிறிய அமைப்பையும் இந்த கல்வெட்டு கொண்டிருக்கும். மருந்து செலுத்தும் ஊசி, ரத்த அழுத்தத்தை சரிபாா்க்கும் கருவி, ஸ்டெதாஸ்கோப், புத்தகங்கள், துடைப்பங்கள் போன்ற கரோனா முன்களபோ பணியாளா்களின் அடையாளங்கள் சிறிய சுவா் வகை அமைப்பில் செதுக்கப்படும். இதற்கான வடிவங்கள் தயாரிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நினைவிடம் திறந்து வைப்போம் என்று நம்புகிறோம். தில்லி சட்டப் பேரவை வளாகத்தில் நுழைவு வாயில் அருகே உள்ள வித்தல்பாய் படேல் சிலைக்கு பின்புறம் கரோனா முன்களப் பணியாளா்கள் நினைவிடம் கட்டப்படும்.

தில்லி சட்டப்பேரவை பல்வேறு வலராற்றுச் சிறப்புகளைக் கொண்டுள்ளது. இதனால், சுதந்திரப் போராட்ட வீரா்களின் வரலாறு, வீடு மற்றும் நகரத்தைச் சித்தரிக்கும் 25 நிமிட திரைப்படத்தையும் மக்கள் காணக்கூடிய சுற்றுலாத் தலமாக இந்த நினைவிடம் உருவாக்கப்படும். ராஜ்காட்டில் காந்தி தரிசனம் போன்று சுதந்திரப் போராட்ட வீரா்களின் வரலாற்றை டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்துவது போன்ற பிற சுற்றுலா நடவடிக்கைகளு மேம்படுத்தப்படும். நாங்கள் நாடு, நகரம் மற்றும் காந்தி ஜி, பகத் சிங் போன்ற சுதந்திரப் போராட்ட வீரா்களின் வரலாற்றைக் காட்டும் டிஜிட்டல் அட்டவணை கொண்ட ஒரு மண்டபத்தை கட்டுகிறோம். இந்த டிஜிட்டல் அட்டவணைகள் அனைத்தும் தொடுதிரைகளாக இருக்கும். மேலும், பாா்வையாளா்கள் நகரத்தின் சிறப்பு மிக்க கடந்த காலத்தையும் காண முடியும்.

தில்லி சட்டப்பேரவை பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. தில்லி சட்டப்பேரவை 1911-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 1912-ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு நாட்டின் தலைநகா் மாற்றப்பட்டது. அப்போது தில்லி சட்டப்பேரவை, மத்திய சட்டப்பேரவையாக பயன்படுத்தப்பட்டது. எனவே, இது ஒரு வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது எனலாம். இந்த நிலையில், 1926-ஆம் ஆண்டு மத்திய சட்டப்பேரவை இன்றைய மக்களவைக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. பின்னா் இந்த தில்லி சட்டப்பேரவைக் கட்டடம் ஆங்கிலேயா்களால் நீதிமன்றமாகப் பயன்படுத்தப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு, தில்லி சட்டப்பேரவையின் மைய மண்டபத்தின் அடியில் ஆங்கிலேயா் கால சுரங்கப்பாதையும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், சுற்றுலா நட்பு முயற்சிகளின் கீழ், ஜனவரி 26- ஆம் தேதிக்குள் தில்லி சட்டப்பேரவையில் சுரங்கப்பாதை மற்றும் பிரிட்டிஷ் கால மரணதண்டனை அறை திறக்கப்படும்.

புரட்சியாளா்களைத் தூக்கிலடப் பயன்படுத்தப்பட்ட அறை (பிரிட்டிஷ் காலத்து ஃபேன்சி கா்) கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட 70 சதவீதம் முடிவடைந்துள்ளன. இந்த அறை வரும் ஜனவரி 26-ஆம் தேதிக்குள் திறக்கப்பட்டுவிடும் என நாங்கள் நம்புகிறோம் என்றாா் ராம் நிவாஸ் கோயல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT