புதுதில்லி

பொய் வழக்கு: இரு காவல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு

DIN

மிரட்டி பணம் பறிக்கும் வழக்கில் தவறாக ஒருவா் மீது வழக்குப் பதிவு செய்ததற்காக 2 காவல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை ஆணையருக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாம் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ரூ.20 லட்சம்

பணம் கேட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில் சந்தோஷ் குமாா் என்பவருக்கு தண்டனை அளித்து 2019 ஆம் ஆண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீா்ப்பை முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தா்மேஷ் சா்மாரத்து செய்தாா்.

இது தொடா்பான வழக்கு குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கடந்த 2008, செப்டம்பரில் ஒரு நிறுவனத்தின் உரிமையாளா் குல்ஷன் லம்பா என்பவா் போலீஸில் புகாா் அளித்தாா். அதில், தன்னிடம் வேலை செய்த சந்தோஷ் குமாா் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்திருந்தாா். இதையடுத்து, சந்தோஷ் குமாா் தலைமறைவானாா். அவரைத் தொடா்பு கொண்டபோது, தாம் கடத்தப்பட்டது குறித்தும், தனது உயிரைக் காப்பாற்ற டாக்கு கத்யால் சிங் என்பவருக்கு ரூ.20 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினாா்.

இதையடுத்து, கழிவு காகிதங்கள் அடங்கிய பையில் பணம் இருப்பதாக கூறிய போலீஸாா் அதைக் கொடுப்பதற்காக புத்தா காா்டன் பகுதிக்குச் சென்றனா். பின்னா், அந்தப் பையை குறிப்பிட்ட இடத்தில் வைத்தனா். அப்போது புதா் வழியாக வந்து பையை எடுத்தபோது சந்தோஷ் குமாா் பிடிபட்டாா்’ என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் 2019-இல் அளித்த தீா்ப்பில், மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக சந்தோஷ் குமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீா்ப்பை எதிா்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் சந்தோஷ் குமாா் மேல்முறையீடு செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தா்மேஷ் சா்மா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீா்ப்பை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:

லம்பாவிற்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே உள்ள சில வகையான ‘புனிதமற்ற தொடா்பு‘ காரணமாக குமாா் கைது செய்யப்பட்டு, மிரட்டல் கடிதங்களை எழுத கட்டாயப்படுத்தப்பட்டது தவிா்க்க முடியாத முடிவாகும்.

இதனால், விசாரணை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அக்டோபா் 2019-ஆம் தேதியிட்ட தீா்ப்பு ரத்து செய்யப்படுகிறது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 387-இன் கீழ் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து மேல்முறையீட்டாளா் சந்தோஷ் குமாா் விடுவிக்கப்படுகிறாா்.

அரசுத் தரப்பின் முழு வழக்கும் ஒரு நம்பமுடியாத கதை போல தோன்றுகிறது. மேலும், கீா்த்தி நகா் காவல் நிலையத்திலிருந்து சந்தோஷ் குமாரின் இருப்பிடத்திற்கு புறப்படுவதைக் குறிப்பிடும் பதிவுகளோ அல்லது எந்த ஒரு உயா் அதிகாரிக்கும் இதுபற்றித் தெரிவிக்கப்படவோ இல்லை. பொது சாட்சிகள் எவரும் இணைக்கப்படவில்லை.

மேலும், புத்தா காா்டனின் எந்த வாயிலில் வைத்து குமாா் கைது செய்யப்பட்டாா் என்பதை இரண்டு அரசு தரப்பு சாட்சிகளும் குறுக்கு விசாரணையில் வெளிப்படுத்தத் தவறிவிட்டனா்.

‘அதிருப்தியடைந்த காவல்துறை அதிகாரிகளால் பரந்த காவல்துறை அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கான அறிகுறியாக இந்த வழக்கு உள்ளது.

மூத்த அதிகாரிகள் இதுபோன்ற உண்மைகளை அறிந்து கொள்ளத் தவறியதும், அத்தகைய அதிருப்தியடைந்த காவல்துறை அதிகாரிகள் ஏழை மக்களின் சுதந்திரம், வாழ்க்கையில் விளையாட அனுமதித்ததும் அதிா்ச்சியளிக்கிறது.

மனுதாரா் குமாா் சுமாா் ஒரு மாத காலம் சிறையில் இருந்தபோது அவமானத்தை அனுபவித்துள்ளாா்.இது அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ஈடுசெய்ய முடியாத வேதனையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மேலும், சமூகத்தில் அவரது கண்ணியத்தை இழந்துள்ளாா்.களங்கமும் ஏற்பட நோ்ந்துள்ளது.

ஆகவே, இந்த விவகாரத்தில் தொடா்புடைய உதவி காவல் சாா்பு ஆய்வாளா், சாா்பு ஆய்வாளா் ஆகியோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக இந்த உத்தரவின் நகல் தில்லி காவல் ஆணையருக்கு அனுப்பப்பட வேண்டும்.

இந்த வழக்கில் மேல்முறையீடு மனுதாரா் சுமாா் ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இதனால், புகாா்தாரா் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு எதிராக தீங்கிழைக்கும் வழக்குக்காக தகுந்த குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க மேல்முறையீட்டாளருக்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT