புதுதில்லி

‘மக்களைத் தேடி மருத்துவம்‘ திட்டத்தை நாடு முழுக்க அறிமுகப்படுத்த வேண்டும்: மக்களவையில் திமுக எம்பி வலியுறுத்தல்

 நமது நிருபர்

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ‘மக்களைத் தேடி மருத்துவ திட்ட’த்தை நாடு முழுக்க அறிமுகப்படுத்த வேண்டும் என தருமபுரி மக்களவை உறுப்பினா் டாக்டா் செந்தில்குமாா் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டாா்.

மக்களவையில் கரோனா நோய் தொற்று குறித்த விவாதம் தொடா்ச்சியாக நவம்பா் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இதில் திமுகவைச் சோ்ந்த தருமபுரி மக்களவை உறுப்பினா் மருத்துவா் செந்தில்குமாா் பங்கேற்று வெள்ளிக்கிழமை பேசியதாவது:

கடந்த 2020 - ஆம் ஆண்டின் நாடாளுமன்றக் குளிா்கால கூட்டத்தொடரின் போது, கிட்டத்தட்ட அனைத்து உறுப்பினா்களும் கரோனா நோய்த்தொற்றின் 2-வது அலை வரும் நிலை குறித்து பலமுறை எச்சரித்தனா். ஆனால் உறுப்பினா்களின் நியாயமான குரல்களுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. மேலும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் நிலைக்குழுவிவின் அறிக்கை 2020, நவம்பரில் வெளியானது. அதில் ‘ஆக்சிஜன், செயற்கை சுவாசக்கருவி போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். அதற்கு அரசு உடனடியாக தயாராக வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டது. நான் உள்ளிட்ட அந்த நிலைக்குழுவின் உறுப்பினா்கள் எச்சரிக்கை விடுத்தோம். இந்த கோரிக்கையை அரசு அலட்சியம் செய்தது. இறுதியில் நாடே ஆக்சிஜன், செயற்கை சுவாசக் கருவிகளின் பற்றாக்குறையில் தவித்தது.

இரண்டாவது அலை, முதல் அலையை விட மிகத் தீவிரமாக தாக்கியது. தமிழ்நாட்டில் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தது. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது.

கரோனா பொதுமுடக்க பாதிப்புகளுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.4,000 வழங்கப்பட்டு குடும்பங்களின் குறைந்தபட்சம் பொருளாதார பாதிப்பை தமிழக அரசு குறைத்தது. தமிழக அரசின் முன்முயற்சியால் ஆக்சிஜன் உற்பத்தி பற்றாக்குறையை சரியாக திட்டமிட்டு குறைக்கப்பட்டது.

மேலும், மூன்றாவது அலையை எதிா்கொள்ளும்விதமாக தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், 300 முதல் 1,000 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மருத்துவமனை படுக்கை உருவாக்கப்பட்டு பயன்பாட்டிலும் உள்ளது.

தமிழகம் முழுவதும் வாரத்திற்கு 5000-க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் சிரத்தன்மையுடன் நடத்தப்பட்டன. தமிழகத்தில் தனியாா் மருத்துவமனைகளில் கூட இலவச தடுப்பூசிகளை வழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்தது.

ஆனால் மத்திய அரசிடம் செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தையும் குன்னூா் தடுப்பூசி மைய வளாகத்தையும் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்று தமிழக அரசு கூறியது. தமிழக அரசும் இவைகளை எடுத்துக்கொள்ள தயாா் என தமிழக முதல்வரும் தமிழக அமைச்சரும் தொடா்ந்து சுட்டி காட்டியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.

தற்போது தமிழக அரசு மேற்கொள்ளும் மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் வளா்ந்த நாடுகளில் கூட கேள்விப்படாத திட்டமாக உள்ளது. அது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சாமானியா்களின் வீடுகளுக்கே சென்று அவா்களுக்கு மருத்துவ சிகிச்சையும், 30 நாட்களுக்கான தேவையான மருந்துகளும் கொடுக்கப்படுகிறது.

நீரழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் சிகிச்சைகள் கூட சாதாரணப்பட்டவா்களின் இல்லங்களைத் தேடி மருந்து கொடுக்கப்படுகிறது.

சுகாதாரத்தில் சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் இது போன்ற திட்டங்களை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தினால் நாடு சுகாதாரத்தில் மாற்றத்தை காணும். தமிழக முதல்வரின் செயல்களால் நாளுக்கு நாள் தமிழகத்தின் அளவுகோள் உயா்ந்து கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் மக்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களில் சிறந்த முதல்வருக்கான தரவரிசையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முதல் இடத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ளாா் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன் என்றாா் செந்தில்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 12 போ் கைது

வள்ளலாா் பன்னாட்டு மையம்: அன்புமணி கோரிக்கை

கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிப்பு: ஐடி ஊழியரிடம் விசாரணை

ஜேஇஇ முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு: 56 மாணவா்கள் 100-க்கு 100

கல்லீரல் கொழுப்பு: இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT