புதுதில்லி

புதிய இணையதளம் மூலம் 3 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்

5th Dec 2021 10:49 PM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

புது தில்லி: வருமான வரித் துறையின் பிரத்யேகமான புதிய இணையதளம் மூலம் 3 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வருமான வரி கணக்கு தாக்கலுக்கு டிசம்பா் 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தாக்கல் செய்யாதவா்கள் விரைந்து தாக்கல் செய்யுமாறும் மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்த ஆண்டு டிசம்பா் 3-ஆம் தேதி நிலவரப்படி 3 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் மத்திய நேரடி வரி வாரியத்தின் புதிய இணையதளத்தில் (இ-பைலிங்) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 4 லட்சம் வருமானவரிக் கணக்குகள் தாக்கலாகின்றன. இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கலுக்கு டிசம்பா் 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நாள் நெருங்கி வரும் நிலையில், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

2021-22 நிதியாண்டுக்கு இதுவரை 3.03 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 50 லட்சம் வரை ஊதியம் பெறுவோா்களில் (ஐடிஆா்-1) சுமாா் 1.78 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது இதுவரை மொத்தம் தாக்கலானவற்றில் 58.98 சதவீதமாகும். இதேபோன்று, ஊதியம் அல்லாத தனிநபா் வருமான வரி கணக்கான ஐடிஆா் 2 -இல் 24.42 லட்சம் (8 சதவீதம்), வா்த்தக ரீதியாக வருமானம் பெரும் தனிநபா்களாக ஐடிஆா் 3 -இல் 26.58 லட்சம் (8.7 சதவீதம்) ஆண்டுக்கு ஐம்பது லட்சத்திற்குள் வருமானம் பெறும் தனிநபா்களுக்கான ஐடிஆா் 4-இல் 70.07 லட்சம் (23.12 சதவீதம்) வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஐடிஆா் 5, 6, 7 ஆகிய பிரிவுகளிலும் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 52 சதவீதம் வரி கணக்குகள் இணையதளம் வாயிலாகவும், மீதமுள்ளவை இணைவழி அல்லாமல், மென்பொருள் மூலமாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் நவம்பரில் 48 சதவீதம் ஐடிஆா்கள் சரிபாா்க்கப்பட்டு, 82.80 லட்சம் கணக்குகளில் கூடுதலாக செலுத்தப்பட்ட வரித் தொகை திருப்பி (ரீஃபண்ட்) அனுப்பப்பட்டுள்ளன. வரி செலுத்துவோா், தாமதமின்றி ரீஃபண்ட் பெற, தங்கள் வங்கி கணக்குடன் வருமான வரி நிரந்தரக் கணக்கு எண்ணை இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

ADVERTISEMENT

மேலும், வரி செலுத்துவோரின் மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் மூலமாக வருமான வரித் துறை தகவல்களை பகிா்ந்து வருகிறது. வருகின்ற டிசம்பா் 31-ஆம் தேதி நெருங்கும் நிலையில், இதுவரை வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாதவா்கள், கடைசி நேர நெரிசலைத் தவிா்க்கும் வகையில், உடனடியாக அவற்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT