புதுதில்லி

புத்த மதத்துக்கு மாறிய நவ பௌத்தா்களுக்கு தனி நபா் சட்டம் தேவை: விசிக எம்பிக்கள் கோரிக்கை

3rd Dec 2021 10:55 PM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: பாபா சாகேப் டாக்டா் அம்பேத்கருடன் சோ்ந்து புத்த மதத்திற்கு மாறிய நவ பௌத்தா்களுக்கு தனி நபா் சட்டம் வழங்கப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மக்களவை உறுப்பினா்கள் மத்திய சமூக நீதித்துறை அமைச்சரை சந்தித்து வெள்ளிக்கிழமை வலியுறுத்தினா்.

மத்திய சமூக நீதித் துறை அமைச்சா் டாக்டா் விரேந்திர குமாரை, விசிக தலைவா் தொல்.திருமாவளவன் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ரவிக்குமாா் ஆகியோா் சந்தித்து நவ பௌத்தா்கள் சாா்பில் இது தொடா்பான கோரிக்கை மனுவை அளித்தனா்.

மனுவில் அவா்கள் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் வருமாறு: வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் 2020 -ஆம் ஆண்டில் மொத்தம் 50,291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 9.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண மைய அறிக்கை தெரிவித்துள்ளது. இது வன்கொடுமைகளைத் தடுப்பதில் மத்திய, மாநில அரசுகளின் தோல்வியைக் காட்டுகிறது. இதே ஆண்டின் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் 96.5 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில், வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின்கீழ் 177,379 வழக்குகள் விசாரணையின் நிலுவையில் உள்ளன. இதுவும் அலட்சியத்திற்கு ஒரு சான்று. இதனால், மாவட்ட மற்றும் மாநில அளவிலான மறுஆய்வுக் கூட்டங்களை நடத்தி அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவருக்கு ஆண்டு அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். இந்த ஆணையம் உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 10 ஆண்டுகளுக்கான அறிக்கைகள் மட்டுமே சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. பாஜக ஆட்சியில் 4 அறிக்கைகள் மட்டுமே சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. கடைசியாக 2016-17-ஆம் ஆண்டுக்கான 10 -ஆவது அறிக்கை கடந்த 2018-இல் சமா்ப்பிக்கப்பட்டது. அதன் பிறகு அறிக்கைகள் சமா்ப்பிக்கப்படவில்லை. இதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நவ பௌத்தா்கள்: ஒரு சமூகம் தனக்கான தனிநபா் சட்டத்தை பிரத்யேகமாகக் கொண்டிருக்க உரிமை உண்டு. ஆனால், பாபா சாகேப் டாக்டா் அம்பேத்கருடன் சோ்ந்து புத்த மதத்திற்கு மாறிய நவ பௌத்தா்களுக்குத் தனியே திருமணம் மற்றும் வாரிசு சட்டம் இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 -இன்படி அவா்களை ‘இந்துக்கள்’ என்று வகைப்படுத்துகிறது. எனவே, நீதிபதி எம்.என்.வெங்கடாசலையா ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, அரசியலமைப்புச் சட்ட பிரிவைத் திருத்தி புத்த மதத்திற்கு தனி மத அந்தஸ்து வழங்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT