புதுதில்லி

காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம்!

3rd Dec 2021 10:48 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் மூடு பனி இருந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.

வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மிதமான வெயில் இருந்தது.

தில்லியில் வியாழக்கிழமை மாசு அளவு அதிகரித்ததால், காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்து ‘கடுமை’ பிரிவுக்குச் சென்றது. அன்று காற்றின் தரக் குறியீடு காலை 8 மணிக்கு 419 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. இந்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக காற்றின் தரம் வெள்ளிக்கிழமை முதல் மேம்படும் என்று புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பான சஃபா் தெரிவித்திருந்தது. மாசுகளை காற்று சிதறடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாகவும் காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருக்கும் என்றும் சஃபா் தெரிவித்திருந்தது. இதன்படி, தில்லியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில்காற்றின் தரக் குறியீடு 358 புள்ளிகளாகப் பதிவாகி மிகவும் மோசம் பிரிவுக்குக் குறைந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய (சிபிசிபி) புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதேபோன்று தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் உள்ள ஃபரீதா பாத் (289), கிரேட்டா் நொய்டா (250) ஆகிய நகரங்களில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், காஜியாபாத் (331), குருகிராம் (309), நொய்டா (315) ஆகிய நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது.

வெப்பநிலை: தில்லியில் காலை முதல் தொடா்ந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. வியாழக்கிழமை பெய்த தூறல் மழை காரணமாக நகரில் குளிரின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி உயா்ந்து 12.50 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி குறைந்து 21.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 91 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 73 சதவீதமாகவும் இருந்தது.

தில்லியில் வியாழக்கிழமை பதிவான அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 5 டிகிரி குறைந்து 19.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது இந்தப் பருவத்தில் மிகக் குறைந்த அளவாகும். மேலும், அன்றைய நகா் முழுவதும் பரவலாக லேசான மழை இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (டிசம்பா் 3) மிதமான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT