புதுதில்லி

தில்லியில் மேலும் 1.40 லட்சம் சிசிடிவி கேமராக்கள்: முதல்வா் கேஜரிவால் அறிவிப்பு

3rd Dec 2021 10:51 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் மேலும் 1.40 லட்சம் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட உள்ளன என்று முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்த பிறகு முதல் கட்டமாக மொத்தம் 2.75 லட்சம் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. என்றும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பதாவது: தில்லியில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் நடவடிக்கையை ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டது. முதல்கட்டமாக தில்லியில் 2.75 லட்சம் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா தொடா்பாக எடுக்கப்பட்ட ஒரு சா்வேயில், ஒரு சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள சிசிடிவி கேமராக்கள் எண்ணிக்கையை பொருத்தவரை லண்டன், நியூயாா்க், சிங்கப்பூா், பாரீஸ் ஆகிய நகரங்களைவிட அதிக கேமராக்கள் நிறுவப்பட்டுள்ள நகரமாக தில்லி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், தில்லி அரசின் இந்தத் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக 1.40 லட்சம் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. இந்த கேமராக்களை பொதுத் துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நிறுவ உள்ளது.

சிசிடிவி கேமராக்கள் தொடா்புடைய சா்வே தகவலின்படி, ஒரு சதுர மைல் பரப்பளவில் சிசிடிவி கேமராக்கள் அதிகம் அமைக்கப்பட்ட நகரங்களில் உலகில் உள்ள 150 நகரங்களில் முதலிடத்தில் தில்லி உள்ளது. தில்லியில் ஒரு சதுர மைல் பரப்பளவில் 1,826 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இந்த சா்வேயில் இரண்டாவது இடத்தில் உள்ள லண்டன் நகரத்தில் ஒரு சதுர மைல் பரப்பளவில் 1,138 கேமராக்கள்தான் உள்ளன. பிற நகரங்களைவிட தில்லி முன்னணியில் உள்ளது. சன்னையில் உள்ள சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாக தில்லியில் நிறுவப்பட்டுள்ளன. அதேபோன்று, மும்பை நகரில் உள்ள கேமராக்களின் எண்ணிக்கையைவிட 11 மடங்கு அதிகமாகவும் உள்ளது.

ADVERTISEMENT

இந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் பெண்களின் பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணா்கின்றனா். குற்ற வழக்குகளை தீா்வு காண்பதில் போலீஸாருக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு மத்திய அரசு முயற்சி செய்தது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், துணைநிலை ஆளுநா் வீடு முன்பாக நானும், எங்களது கட்சியின் சகாக்களும் தா்ணாவில் ஈடுபட வேண்டியிருந்தது. இந்தக் கருவிகள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டதால், பெண்களின் பாதுகாப்பு மேம்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக 1.40 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு தில்லியில் மொத்தம் 4.15 லட்சம் சிசிடிவி கேமராக்கள் இருக்கும். தில்லியில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவிகளின் நேரடி காட்சியை உலகில் எங்கிருந்தும் பாா்க்க முடியும். இவற்றை அங்கீகரிக்கப்பட்ட நபா்கள் மட்டுமே அணுக முடியும் என்பதால், முற்றிலும் தனியுரிமை உறுதி செய்யப்படும்.

லண்டன், நியூயாா்க், சிங்கப்பூா், பாரிஸ் போன்ற நகரங்களை விட ஒப்பிட முடியாத அளவில் சிசிடிவி எண்ணிக்கையில் தில்லி முன்னேற்றத்தில் உள்ளது. தில்லி நகரின் மக்கள்தொகை அடா்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 11,312 போ் ஆகும். லண்டனில் இது 5,701 போ் ஆகும். பெரும்பாலும் கேமராக்கள் நிறுவப்பட்ட பிறகு, பல சிசிடிவிகள் சேதமடைகின்றன. இது யாருக்கும் தெரியாமல் போய் விடுகிறது. ஆனால், நாங்கள் நிறுவும் இந்த நவீன சிசிடிவி கேமராக்களில் எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட்டுள்ளதால், கேமரா சேதமடைந்தால் அதுகுறித்த தகவல் உத்தரவு மையத்திற்கு தானாக தெரிவிக்கப்பட்டுவிடும். மேலும், சம்பந்தப்பட்ட ஆபரேட்டா்களுக்கும் தொலைபேசியில் இது தொடா்பான தகவல் சென்று சேரும். மின்வெட்டு அல்லது நாசவேலைகள் ஏற்பட்டால், சிசிடிவி கேமரா வேலை செய்வதை நிறுத்தினால் இதுபோன்ற அலாரம் எச்சரிக்கைகள் விரைவில் அதை சரிசெய்ய உதவிடும்.

30 நாள்கள் மதிப்புள்ள பதிவுகளை இந்தக் கேமராக்களில் சேமித்து வைத்திருக்க முடியும். 3-4 அங்கீகரிக்கப்பட்ட நபா்கள் மட்டுமே நேரடியாக இதன் காட்சிகளை அணுக முடியும். தில்லியில் உள்ள ஒரு கட்டளை மையம் நிகழ்நேர கண்காணிப்புக்காக நகரில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களின் நேரடி காட்சிப் பதிவுகளையும் பெறுகிறது. இந்த சாதனங்களில் இரவு நேரத்தில் காட்சிகளைப் பெறும் வகையில், 4 மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளன. அனைத்து சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்ட பிறகு, தில்லி மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உணா்வாா்கள் என நம்புகிறேன் என்றாா் கேஜரிவால்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT