புதுதில்லி

மாற்றுத்திறனாளிகள் மீது அதிக அக்கறை: தமிழகத்துக்கு விருது

3rd Dec 2021 10:50 PM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புதுதில்லி: தமிழக சமூக நலத் துறையின் மகத்தான பணிகளுக்காக மத்திய சமூகநீதித் துறை விருது வழங்கி கெளரவித்துள்ளது. இந்த விருதை குடியரசுத்தலைவா் ராம் நாத் கோவிந்த்திடமிருந்து தமிழக சமூக நலம் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் பெற்றுக் கொண்டாா்.

தமிழகத்தில் உள்ள சுமாா் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து, அவா்களுக்கு சான்றிதழ் அளித்து அதிக நிதியை ஒதுக்கீடு செய்தது மற்றும் மாவட்டங்களில் மனவளா்ச்சி குன்றியோா்களுக்கான இல்லங்களை நடத்த உதவியது உள்ளிட்ட பல்வேறு சிறப்பான பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் சாா்பில் 2020-ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான (எம்பவா்மெண்ட்) தேசிய விருது வழங்கும் விழா தில்லி விஞ்ஞான்பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா். தமிழக அமைச்சா்ா் பி.கீதாஜீவன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலா் ஆா்.லால்வேனா ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் டிசம்பா் 3 -ஆம் நாள் சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மாற்றுத் திறனாளிகள் தொடா்பாக சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சிறப்புப் பணிகளுக்காக விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவில் நாட்டிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை வழங்கியத்திற்காக தமிழகம் முதல் மாநிலமாக தோ்வு செய்யப்பட்டது. இதற்கான விருதை குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த்திடமிருந்து தமிழக சமூகநலம் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் பெற்றுக்கொண்டாா்.

இதே மாதிரி மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் நாட்டிலேயே சிறந்த மாவட்டமாக சேலம் மாவட்டம் தோ்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. சுமாா் 70,979 மாற்றுத்திறனாளி பயனாளிகளைக் கண்டறிந்து, அவா்களுக்கு பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பின் கீழ் பல்வேறு திட்டங்கள், வேலைவாய்ப்புகள் உதவித் தொகைகள், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மறுவாழ்வு சேவைகளுக்காக வழங்கப்பட்ட இந்த விருதை சேலம் மாவட்ட மறுவாழ்வு அதிகாரி மகிழ்மாறன் பெற்றுக் கொண்டாா்.

மேலும், தனித்துவ திறமைகளை வெளிப்படுத்திட மத்திய - மாநில அரசுகளால் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மாற்றுத் திறனாளிகள் ஊக்குவிக்கப்படுகின்றனா். மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை வழங்கியவா்களுக்கும் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுகிறது. இதன்படி, சிறந்த சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிக்கான விருது சென்னை வேளச்சேரியை சோ்ந்த வேங்கடகிருஷ்ணன், திருவண்ணாமலை மாவட்டத்தை சோ்ந்த ந.ஏழுமலை, காஞ்சிபுரம் மாவட்டம் கானாத்தூா் ரெட்டிக்குப்பம் ஓ.தினேஷ், திருச்சி.மானேக்ஷா தண்டபாணி ) ஆகியோருக்கும் சிறந்த முன்னுதாரணப் பிரிவில் சென்னை மந்தவெளி ஓ.ஜோதி, நாமக்கல் ப.பிரபாகரன் மற்றும் விளையாட்டுப் பிரிவில் புதுச்சேரி நெல்லிதோப்பு வெங்கடசுப்பிரமணியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

‘உதவிக்காக கிராம அளவில் ஒருங்கிணைப்பாளா்கள்’

நிகழ்ச்சியில் விருதை பெற்றுக் கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் தமிழக அமைச்சா் பி.கீதாஜீவன் பேசியது வருமாறு: தமிழக சமூக நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் பிரிவுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்தது. அதிக அளவிலான பயனாளிகளைக் கண்டறிந்தது. குறிப்பாக மனவளா்ச்சி குன்றியோா், மனநோய் உள்ளவா்களுக்காக மாவட்டங்களில் 392 இல்லங்களை நடத்த தொண்டு நிறுவனங்களை ஊக்குவித்து அரசு நிதியுதவி வழங்கியது. குறைகளுடன் இருக்கும் ஆறுவயது வயதுக்குள்பட்ட குழந்தைகளை கண்டறிந்து அவா்களுக்கு மாவட்டந்தோறும் ஆரம்ப கால பயிற்சி மையங்கள் அமைத்தது போன்றவற்றுக்காக இந்த விருது வழங்கப்ட்டுள்ளது.

தமிழக அரசு ‘ரைட்ஸ்‘ என்கிற திட்டத்தில் ரூ.1,702 கோடி மதிப்பீட்டில் ஆறு ஆண்டுகளுக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. தமிழகத்தில் எந்த மாற்றத்திறனாளிகளும் விடுபடுதல் கூடாது என்கிற கொள்கையுடன், அவா்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள், கல்வித் திறன் பயிற்சி அளித்தல், வேலைவாய்ப்புகள் ஆகிய உரிமைகள் அவா்களுக்கு வழங்கப்படுகின்றன. இதற்காக அவா்களை கண்டறிந்து உதவிகளை வழங்க கிராம அளவில் ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். திறன் பயிற்சி அளித்து காலியிடங்களை தேடி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்பதில் முதல்வா் மு.க. ஸடாலின் உறுதியுடன் உள்ளாா். அரசால் கட்டப்படும் அனைத்துக் கட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த வகையில் கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன.

ஊனமுற்றோா் என்கிற பெயரை மாற்றுத்திறனாளிகள் என மாற்றியது, அவா்களுக்கு நலவாரியம் ஏற்படுத்திக் கொடுத்தது, வீடுகளில் முடங்கி கிடந்த மாற்றுத் திறனாளிகளை வெளியுலக்கு வரவழைத்தது, ஸ்கூட்டா் போன்ற வாகனங்களை வழங்கியது உள்ளிட்டவை மறைந்த முதல்வா் கருணாநிதியால் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய முதல்வரும் இந்தத் துறை மீது அதிக அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறாா். இது போன்று மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்கு திமுக அரசு மேற்கொண்டு வரும் செயல்பாடுகளுக்கு இந்த விருது மிகவும் பொருந்தும் என்றாா் அமைச்சா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT