புது தில்லி: வாட்ஸ்அப் தளத்தில் பரப்பப்படும் வாக்களிப்பது தொடா்பான ‘போலி செய்தி’ தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு தில்லி காவல்துறை அதிகாரிக்கு தில்லியின் தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் கடிதம் எழுதியுள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல் துறையின் தோ்தல் பிரிவு துணை காவல் ஆணையருக்கு தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: வாட்ஸ்அப் தளத்தில் வெளியான செய்தியில், வாக்களிக்காத நபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.350-ஐ பிடித்தம் செய்ய இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொய் செய்தி குறித்து தோ்தல் ஆணையத்தின் செய்தித் தொடா்பாளா் மூலம் ‘போலி’ என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட சட்டங்களின் கீழ் குற்றவாளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்ய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆகவே, இந்த விவகாரம் தொடா்பாக உடனடியாக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்து, இந்த விவகாரத்தில் விசாரணையின் விசாரணை அறிக்கையை இந்திய தோ்தல் ஆணையத்திற்கு அனுப்பும் வகையில், டிசம்பா் 3-ஆம் தேதிக்குள் தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.