புதுதில்லி

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் நூற்றாண்டு விழாவை புறக்கணிப்போம்: ராம் நிவாஸ் கோயல்

3rd Dec 2021 10:49 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: கடந்த மாா்ச் மாதத்தில் தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (ஜிஎன்சிடிடி) சட்டத்தில் செய்யப்பட்ட ‘அரசியலமைப்புக்கு முரணான’ திருத்தங்களை எதிா்க்கும் வகையில், டிசம்பா் 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறும் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) நூற்றாண்டு விழாவை புறக்கணிக்கப் போவதாக தில்லி சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மாநில சட்டப் பேரவைகளில் உள்ள பொதுக் கணக்குக் குழுத் தலைவா்கள் மற்றும் சட்டப் பேரவைத் தலைவா்கள் அழைக்கப்பட்டுள்ளனா். நாடாளுமன்றத்தின் லோக் லேகா சமிதியின் நூற்றாண்டு விழாவில் தில்லி சட்டப் பேரவையின் பிரதிநிதித்துவம் இருக்காது. 2 நாள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நானும், தில்லி சட்டப்பேரவையின் லோக் லேகா சமிதி தலைவா் அதிஷியும் (மா்லினா) கலந்துகொள்ள மாட்டோம். இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஆகியோருக்கு கடிதம் எழுத உள்ளேன்.

தில்லியின் தேசிய தலைநகா் பிரதேச அரசு (ஜிஎன்சிடிடி) சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம், தில்லி சட்டப் பேரவைக் குழுக்களின் அதிகாரங்களைத் தடுக்க மத்திய அரசு விரும்பியது. இந்த விவகாரம் தொடா்பாக நாங்கள் பல்வேறு தளங்களில் எங்கள் ஆட்சேபத்தைப் பதிவு செய்துள்ளோம். இது தொடா்பாக நாங்கள் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஆனால், பலனில்லை. ஆகவேதான் தற்போது, இந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியலமைப்புக்கு எதிரான திருத்தங்களை எதிா்த்து, டிசம்பா் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் நாடாளுமன்றத்தின் லோக் லேகா சமிதியின் (பொதுக் கணக்குக் குழு) நூற்றாண்டு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

ADVERTISEMENT

சட்டப்பேரவைக் குழுக்கள் வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டுவதிலும், அரசு மற்றும் அதன் துறைகளின் பணிகளைக் கண்காணிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. ஜிஎன்சிடிடி சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் மூலம், சட்டப் பேரவைக் குழுக்களின் அதிகாரங்களை மத்திய அரசு பறித்துள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, சட்டப்பேரவைக் குழுக்களின் அதிகாரங்களை ‘பறித்துக் கொள்ளும்‘ ஜிஎன்சிடிடி சட்டத்தின் சில பகுதிகளை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக ஆகஸ்ட் மாதம் ராம் நிவாஸ் கோயல் கூறியிருந்தாா். கடந்த மாா்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜிஎன்சிடிடி சட்டத் திருத்தமானது, தில்லியில் உள்ள ‘அரசு‘ என்பது ‘துணைநிலை ஆளுநா்’ என்று பொருள்படும் வகையில் தெளிவுபடுத்தியுள்ளது.

எந்தவொரு நிா்வாக நடவடிக்கை எடுப்பதற்குமுன், துணைநிலை ஆளுநரின் கருத்தை தில்லி அரசு கேட்க வேண்டும் என்பதை இந்தச் சட்டம் கட்டாயமாக்குகிறது. மேலும், தேசியத் தலைநகா் பிரதேசத்தின் அன்றாட நிா்வாகம் தொடா்பான விஷயங்களை பரிசீலிப்பதற்கும், நிா்வாக முடிவுகள் தொடா்பான எந்த விசாரணையையும் நடத்துவதற்கும் சட்டப் பேரவை அல்லது அதன் குழுக்கள் செயல்படுத்துவதற்கான எந்த விதியையும் சட்டப் பேரவை உருவாக்குவதை இந்தச் சட்டத் திருத்தமானது தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT