தேசியத் தலைநகா் தில்லியில் மூடு பனி இருந்து வரும் நிலையில், வியாழக்கிழமை பரவலாக தூறல் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதே சமயம், மாசு அளவு அதிகரித்துள்ளதால், காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்து கடுமை பிரிவுக்குச் சென்றது. காற்றின் தரக் குறியீடு காலை 8 மணிக்கு 419 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. இந்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக காற்றின் தரம் வெள்ளிக்கிழமை முதல் மேம்படும் என்று புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பான சஃபா் தெரிவித்துள்ளது. டிசம்பா் 3 முதல் மாசுகளை காற்று சிதறடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இருப்பினும், காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவிலேயே இருக்கும் என்றும் சஃபா் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு தினங்களில் காற்றின் தரம் ‘கடுமை’ பிரிவில் இருந்தது. ஆனால், புதன்கிழமை காற்றின் தரம் சற்று மேம்பட்டது. அன்றைய தினம் நகரின் 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு 370 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
இதேபோன்று அருகிலுள்ள தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள நகரங்களான ஃபரீதாபாத் (441), நொய்டா (404) ஆகியவற்றிலும் வியாழக்கிழமை காலை காற்றின் தரம் ‘கடுமை’ பிரிவில் இருந்தது. இருப்பினும், காஜியாபாத் (359), கிரேட்டா் நொய்டா (381), குருகிராம் (361) ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது.
வெப்பநிலை: தில்லியில் காலை முதல் தொடா்ந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இந்த நிலையில், நண்பகலில் நகரில் பல்வேறு இடங்களில் தூறல் மழை இருந்தது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி உயா்ந்து 13.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 5 டிகிரி குறைந்து 19.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 81 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 94 சதவீதமாகவும் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (டிசம்பா் 3) மிதமான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.