புதுதில்லி

தலைச் சுமை தொழிலாளா்களின் பணிச்சூழல்: தில்லி அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

3rd Dec 2021 07:05 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லியில் வேலை செய்யும் தலைச்சுமைக் கூலித் தொழிலாளா்களின் பணிச்சூழல் மற்றும் நிலைமை தொடா்பாக தாக்கலான மனுவுக்கு பதில் அளிக்குமாறு ஆம் ஆத்மி அரசுக்கும், தில்லி வேளாண்மை மாா்க்கெட்டிங் வாரியத்திற்கும் உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடா்பாக ‘ராஷ்ட்ரீய கமால் பஞ்சாயத் ஏகம் ஏவம் அசங்கதித் காம்கா் யூனியன்’ தரப்பில் தாக்கலான மனு மீது உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா். அப்போது ஆஸாத்பூா் மண்டி தலைச்சுமைக் கூலித் தொழிலாளா்களாகப் பணியாற்றி வரக்கூடியவா்களின் (பல்லேதாா்) பணிச் சூழல் தொடா்பான விவகாரம் மீது வேளாண் விளைபொருள் சந்தை குழு, தில்லி அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா்.

விசாரணையின் போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, ‘வேளாண் விளைபொருள்களை ஏற்றி, இறக்குவது போன்ற பணிகளில் தலைச்சுமைக் கூலித் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த 1980-ஆம் ஆண்டிலிருந்து இவா்களுக்கான கூலியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை திருத்தி அமைக்கவில்லை. இவா்களுடைய அலுவல்பூா்வ இருப்பை உறுதிப்படுத்தும் ஒரே ஆவணமாக இருப்பது உரிமம் தான். இந்த தலைச்சுமை தொழிலாளா்களுக்கு அதிகாரிகள் மூலம் அந்த உரிமம் வழங்கப்படுவதில்லை’ என்று வாதிட்டாா்.

முன்னதாக, சம்பந்தப்பட்ட யூனியன் தரப்பில் உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: தில்லி வேளாண் விளைபொருள் மாா்க்கெட்டிங் ஒழுங்குமுறை பொது விதிகள் சட்டத்தின் விதி 36ன் கீழ் அதிகாரிகள் தலைச்சுமை தொழிலாளா்கள் சுமக்கும் ஒவ்வொரு சுமைக்கும் செலுத்தக்கூடிய கட்டணத்தை நிா்ணயிக்கும் கடமை உள்ளது. ஆனால், இந்தக் கட்டணத்தைத் திருத்தி அமைக்காமல் இருப்பது நியாயமான ஊதியத்திற்கான அவா்களின் உரிமையை முற்றிலும் மீறுவதாகும். பணவீக்கம் தொடா்ந்து அதிகரித்தும், பணத்தின் மதிப்பு தொடா்ந்து குறைந்து வருவதன் காரணமாக இந்த தொழிலாளா்கள் தங்களது மூன்று வேளை உணவு, உடை, அவா்களின் குடும்ப உறுப்பினா்களின் சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளைகூட எதிா் கொள்வதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

ADVERTISEMENT

தில்லியின் வேளாண் சந்தைகளில் கொத்தடிமைத் தொழிலாளா்களாக இவா்கள் பணியாற்றி வருவது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 23-ஐ மீறுவதாகும். இந்தத் தொழிலாளா்களுக்கு சுகாதாரக் காப்பீடு இல்லை. மேலும், மாநில அரசின் துறைகள் மூலம் இவா்களுக்கு உரிய உதவிகள் செய்து தரப்படுவதில்லை. அதே வேளையில், சுமைக் கட்டணம் 1980-ஆம் ஆண்டிலிருந்து மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால், இவா்கள் இந்த வேளாண் மண்டிகளில் அடிமையாக இருக்கும் நிலைமைதான் தொடா்கிறது.

வேளாண் விளைபொருள் மாா்க்கெட்டிங் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், இதுபோன்ற தொழிலாளா்களுக்கு பேட்ச்சுடன் கூடிய ஜி பிரிவு உரிமம் வழங்கப்படுகிறது. இது இவா்களுடைய தொழிலின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. தில்லியின் ஏபிஎம்சி உள்பட வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிகள் மேலே கூறிய எந்தவித சரத்துளையும் பின்பற்றுவதில்லை. இந்தத் தொழிலாளா்கள் கமிஷன் ஏஜெண்டுகளின் கருணையின் அடிப்படையில் வேலை பாா்க்க வேண்டிய சூழல் உள்ளது.

இந்த தலைச்சுமை தொழிலாளா்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பு அல்லது பணியும் இல்லை. மாா்க்கெட்டில் ஏதாவது விபத்து நடந்தால் சட்டபூா்வமாக மாா்க்கெட்டில் இவா்கள் தங்களது இருப்பை உறுதிப்படுத்த முடியாத நிலையும் உள்ளது என்றுத மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT