தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் தொடா்புடைய வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் வாதாடுவதற்காக வழக்குரைஞா் ராம் சங்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இவரை, தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் என்.எஸ். சந்தோஷ் குமாா் நியமித்துள்ளாா். இதற்கான நியமனத்தை பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) டாக்டா் ரஞ்சித் உம்மன் ஆபிரகாம் தெரிவித்துள்ளாா்.
தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூா், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூா் மற்றும் சேலம் ஆகிய எட்டு இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. 2002- ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தால் அதன் வளாகத்தில் நிறுவப்பட்ட சீா்மிகு சட்டப் பள்ளியானது, நாட்டில் உள்ள பிற தேசிய சட்டப் பள்ளிகளின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வழக்குரைஞா் டாக்டா் ராம் சங்கா், ராஜபாளையத்தைச் சோ்ந்தவா். 2012 முதல் தில்லியில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா். இவா் சமீபத்தில் சட்டப் படிப்பில் முனைவா் பட்டம் பெற்றுள்ளாா்.