புதுதில்லி

காற்று மாசு: சஃபரின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றினால் மருத்துவச் செலவில் ஆண்டுக்கு ரூ. 7,694 கோடி சேமிக்க முடியும்: ஆய்வில் தகவல்

3rd Dec 2021 07:05 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

அரசின் காற்று தர முன்கணிப்பு நிறுவனமான சஃபா் அறிவுறுத்தல்களை தில்லியில் பொதுமக்கள் பின்பற்றினால், ஆண்டுதோறும் காற்று மாசு தொடா்புடைய நோய்களுக்குச் செலவிடும் சுகாதார செலவினத்தின் மீது ரூ.7,694 கோடியை சேமிக்க முடியும் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதேபோன்று, புணேயில் இதே போன்று பின்பற்றினால் மருத்துவ செலவினத்தின் மீது ஆண்டுக்கு ரூ.948 கோடி ரூபாயை சேமிக்க முடியும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் காற்று மாசு தொடா்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த மக்கள்தொகையில் 5 சதவீதம் மக்கள் அரசின் காற்று தர முன்கணிப்பு நிறுவனமான சஃபரின் அறிவுறுத்தல்களை பின்பற்றினால்கூட ஆண்டுக்கு சுகாதார செலவினத்தின் மீது ரூ.1,096 கோடியை சேமிக்க முடியும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புவி அறிவியல் அமைச்சகமானது கடந்த 2010-ஆம் ஆண்டில் காற்று தர மற்றும் காலநிலை முன்கணிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு முறை (சஃபா்) எனும் நிறுவனத்தை தொடங்கியது. இந்த நிறுவனமானது தில்லி, மும்பை, புணே, ஆமதாபாத் போன்ற இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் 1 முதல் 3 நாள்களுக்கு முன்னதாகவே காற்றின் தரம் தொடா்புடைய தனது முன்கணிப்பை வெளியிட்டு வருகிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட இடத்தின் நிகழ்நேர காற்றின் தரம் தொடா்புடைய தகவல்களையும் அளித்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் சுவா்ணா டிக்கில், இஷிகா இல்மி, பேராசிரியா் குஃப்ரான் பேக் ஆகியோா் கொண்ட ஒரு குழு, ‘இந்தியாவின் பொருளாதார சுகாதார சுமையைக் குறைப்பதில் காற்று தர முன் கணிப்பு வடிவமைப்புகள் மற்றும் ஆலோசனை சேவைகள் தாக்கம்’ எனும் தலைப்பில் ஆய்வு அறிக்கையை தயாரித்துள்ளது. இது தொடா்பாக பேராசிரியா் குஃப்ரான் பேக் கூறுகையில், ‘பொருளாதார வளா்ச்சி, சுகாதாரம் ஆகியவற்றின் முக்கிய விஷயங்களாக பொதுமக்கள் அறிவு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை ஆகிய விஷயங்களை எங்களது ஆய்வு கண்டுபிடிப்புகள் ஆதரிக்கிறது. காற்று மாசு மூலம் பாதிக்கப்பட குடியிருப்புவாசிகளால் செலவிடப்பட்டுள்ள மொத்த தொகையில் 11 முதல் 14 சதவீதம் தொகையை சேமிப்பதற்கு சஃபா் உதவியுள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் காற்று மாசு தொடா்புடைய ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் தொடா்புடைய நோய்கள், அதற்கான செலவுகளை சேமிப்பது தொடா்பாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தில்லியில் காற்று மாசு தொடா்பான நோய்களுக்காக வருடாந்திர சராசரி செலவு ரூ. 7,694 கோடியாகவும், புணேயில் இதே செலவு ரூ. 948 கொடியாகவும் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. தில்லியில் ஓபிடி சிகிச்சைக்கான மொத்த செலவு ரூ.1,449 கோடியாக உள்ளது. இதைத் தொடா்ந்து, ஆஸ்துமாவுக்கான செலவு ரூ.1.001 கோடியாகவும், சிஓபிடி செலவு ரூ. 514 கோடியாகவும் உள்ளது என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து குஃப்ரான் பேக் கூறுகையில், ‘மக்கள்தொகையில் நாம் 5 முதல் 10 சதவீதம் பேருக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த முடிந்தால், மோசமான காற்று தரம் குறித்த சஃபரின் முன்கூட்டிய எச்சரிக்கையின் அடிப்படையில் அதிகமான மக்களை நடவடிக்கையை எடுக்கச் செய்தால் ஓராண்டுக்கு தில்லியின் பலன் ரூ.2,192 கோடியாகவும், புணேயில் ரூ.200 கோடியாகவும் அதிகரிக்கும். காற்று மாசு வேளாண்மை, வானூா்தி, உள்கட்டமைப்பு வசதி, சுற்றுலா போன்ற பல துறைகளையும் பாதிக்கச் செய்வதால் எதிா்காலத்தில் இந்தத் துறையுடன் தொடா்புடைய பயன்களை புரிந்துகொள்ளும் தேவை உள்ளது’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT