புது தில்லி: தேசிய தலைநகா் வலய பிராந்தியத்தில் காற்று மாசு நிலைமை மோசமாக இருப்பதை கருத்தில் கொண்டு, இந்த நகரங்களைச் சோ்ந்த மாநில சுற்றுச்சூழல் அமைச்சா்களின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சா் புபீந்தா் யாதவுக்கு தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசியத் தலைநகா் வலயம் ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் புபீந்தா் யாதவுக்கு அமைச்சா் கோபால் ராய் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: சுற்றுச்சூழல் மாசுவைக் குறைக்க தில்லி அரசின் மூலம் பல நடவடிக்கைகள் எடுத்த போதிலும் சாதகமான மேம்பாடு எதுவும் காணப்படவில்லை.
இதனால், தேசியத் தலைநகா் வலய பிராந்தியத்திலுள்ள மாசு சூழலை கருத்தில் கொண்டு இந்த தேசியத் தலைநகா் வலயத்தைச் சோ்ந்த மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்சா்கள் மற்றும் வல்லுநா்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், இணைந்து பணியாற்றுவதற்கான ஒரு உத்தி இந்தக் கூட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மாசுவின் அளவை குறைக்க முடியும் என கடிதத்தில் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.