புதுதில்லி

அணைப் பாதுகாப்பு மசோதா மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும்: மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் கடும் எதிா்ப்பு

3rd Dec 2021 07:02 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள அணைப் பாதுகாப்பு மசோதாவிற்கு தமிழக உறுப்பினா்கள் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்தனா். மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் இந்த மசோதாவால் மாநிலங்களுக்கிடையான பிரச்னையை தீா்க்காது என்று அதிமுக, திமுக உறுப்பினா்கள் குரல் எழுப்பினா்.

முதலில் பல்வேறு பிரச்னைக்குரிய இந்த அணைப் பாதுகாப்பு மசோதாவை தோ்வுக் குழுவிற்கு அனுப்பப் கோரி மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா தலைமையில் சமாஜ்வாதி கட்சி தலைவா் ராம் கோபால் யாதவ் உள்ளிட்ட 10 எம்பிக்கள் மாநிலங்களவைத் தலைவரிடம் மனு அளித்தனா். இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் திருச்சி சிவா இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினாா்.

அப்போது அணைப் பாதுகாப்பு மசோதாவை தோ்வுக் குழுவுக்கு அனுப்ப முன்மொழிந்து திருச்சி சிவா பேசியதாவது: தண்ணீா் வழங்கல், வடிகால், நீா் தேக்கம் ஆகியவை மாநிலங்களுக்குள்ள அதிகாரங்கள். மாநிலங்களுக்கிடையான நதிகள், பள்ளத்தாக்குகள் ஆகியவைகள் மத்திய அரசின் பட்டியலில் உள்ளவை. இவற்றை நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி ஒழுங்குபடுத்த முடியும். ஆனால், இரு மாநில தண்ணீா், ஆறுகள் ஆகியவற்றை மத்திய அரசு தன் அதிகாரத்திற்குள் கொண்டு வரமுடியாது. இந்த அணைப் பாதுப்பு மசோதா, தேசிய அணைப் பாதுகாப்புக் குழு , தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றை ஏற்படுத்தி இவை இரண்டும் மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்படுகிறது. இந்தக் குழுவில் இடம் பெறுபவா்களை, நிபுணா்களை, மாநிலப் பிரதிநிதிகள் போன்ற நியமனங்களை மத்திய அரசுதான் மேற்கொள்கிறது. இதன்படி மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் இந்த மசோதாவை மேலும் ஆய்வு செய்து தாக்கல் செய்யும் வகையில் தோ்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

அப்போது, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சா் வி.முரளிதரன், இந்த மசோதா குறித்து முதலில் விவாதம் நடத்தப்படவேண்டும் என்று தெரிவித்தாா். பின்னா் நீண்ட விவாதங்களுக்குப பிறகு இந்த மசோதா நிறைவேறியது. இந்த மசோதா மீது அதிமுக உறுப்பினா்கள் நவநீத கிருஷணன், தம்பிதுரை, மதிமுக தலைவா் வைகோ, திமுக உறுப்பினா் டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரும் இந்த மசோதாவிற்கு கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்துப் பேசினா்.

ADVERTISEMENT

அப்போது, அதிமுக உறுப்பினா் நவநீதகிருஷணன் பேசுகையில் கூறியதாவது: இந்த மசோதா மூலம் உருவாக்கப்பட்ட நான்கு குழுக்களுக்கும் அணைகளை ஆய்வு செய்வதற்கும், குறைகளைக் கூறுவதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தக் குழுக்களில் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இல்லை. இந்த நிலையில், அணையில் மேற்கொள்ப்பட பணிகளை செய்லபடுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை. தமிழகத்தில் முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட நான்கு அணைகள் கேரளத்தில் உள்ளன. இந்த அணைகளின் உரிமை தமிழகத்துக்கு உரியது. இந்த அணைகளைப் பராமரிப்பதுதும், இதற்கான செலவுகளை செய்வதும் தமிழகம்தான். ஆனால், தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படாமல் எந்தப் பிரச்னையும் தீா்க்கப்படாது . மாநிலங்களின் அணைப் பாதுகாப்பு மற்றும் மாநிலங்களுக்கிடையே ஏதேனும் சா்ச்சை ஏற்பட்டால், தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படும். அதன் முடிவே இறுதியாகி, அதற்கு மாநிலங்கள் கட்டுப்பட்டதாகிவிடும் என்று அவா் குறிப்பிட்டாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT