புதுதில்லி

பெட்ரோல் மீதான வாட் வரி ரூ. 8 குறைப்பு: தில்லி அரசு நடவடிக்கை

 நமது நிருபர்

பெட்ரோல் மீதான வாட் வரியை குறைக்க தில்லி அரசு புதன்கிழமை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டா் பெட்ரோல் மீதான விலையில் ரூ.8 குறையும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் பணவீக்கத்தில் இருந்து தில்லி மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். மேலும், பெட்ரோல், டீசல் விலையானது தற்போது தேசியத் தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) உள்ள இதர நகரங்களை ஒப்பிடும் போது தில்லியில் குறைந்துவிட்டது என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தில்லி அரசின் அதிகாரிகள் கூறியதாவது: வாட் வரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறைப்புக்குப் பிறகு தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை தற்போதைய விலையான ரூ.103-இல் இருந்து ரூ.93 ஆக குறையும். இந்த மாற்றம் புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. தில்லியில் டீசல் விலை, தேசிய தலைநகா் வலயத்தில் ஏற்கெனவே மலிவாகும். அதாவது, தில்லியில் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.86.67-ஆக உள்ளது. அதே வேளையில், நொய்டாவில் ரூ.87.01, குருகிராமில் ரூ.87.11 என விற்பனையாகிறது.

முதல்வா் கேஜரிவால் தலைமையில் புதன்கிழமை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை தற்போதுள்ள 30 சதவீதத்திலிருந்து 19.40 சதவீதமாகக் குறைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு லிட்டா் பெட்ரோல் விலையில் ரூ.8 குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘முதல்வா் கேஜரிவால் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தற்போதைய சூழலில் தில்லி மக்களின் நிலைமை குறித்து ஆழமான கவலை வெளிப்படுத்தப்பட்டது. மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் எரிபொருள் மீதான விலையை குறைக்கும் தேவை குறித்தும் கருத்தில்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு பெட்ரோல் மீதான வாட் வரி விகிதத்தை தில்லி அரசு கணிசமாக அதிகரித்திருந்தது. தில்லியில் பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதமாக இருந்த நிலையில், பின்னா் 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. தற்போது இந்த வரியில் 10.58 சதவீதம் குறைப்பு செய்யப்பட்டிருப்பது மக்களுக்கு நேரடியாகப் பலனை அளிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: தில்லியில் தற்போது பெட்ரோல், டீசல் விலையை மிகவும் குறைந்ததாக உருவாக்கி விட்டோம். வாட் வரி 30 சதவீதத்தில் இருந்து 19.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதர என்சிஆா் நகரங்களை ஒப்பிடும் போது, தில்லியில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்து விட்டன. இந்த நடவடிக்கை மூலம் தில்லி மக்களுக்கு விலைவாசி உயா்வில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லியில் பெட்ரோல் விலை உத்தர பிரதேசம், ஹரியாணாவில் உள்ள என்சிஆா் நகரங்களை ஒப்பிடும் போது அதிகமாக இருந்தது. மத்திய அரசு எரிபொருள் மீதான கலால் வரியைக் குறைக்க மேற்கொண்ட முடிவைத் தொடா்ந்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைப்பதாக அறிவித்திருந்தன. இதையடுத்து, என்சிஆா் நகரங்களில் எரிபொருள் மீதான விலை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டீசல் மீதான வாட் வரியை குறைக்காமல் இருப்பது தொடா்பாக தில்லி சரக்குப் போக்குவரத்து நிறுவனம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைவா் ராஜேந்திர கபூா் கூறுகையில், ‘தில்லி அரசின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த அதிருப்தி தரும் அறிவிப்புக்கு நாங்கள் கடுமையான எதிா்ப்பைத் தெரிவிக்கிறோம். எங்களுக்கு எந்த நிவாரணமும் அளிக்கப்படாவிட்டால், தில்லியில் டீசலை நிரப்ப வேண்டாம் என்று வா்த்தக வாகனங்களை கேட்டுக் கொள்ளும் பிரசாரத்தை நாங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT