புதுதில்லி

அதிமுக சின்னம், பெயா் விவகாரம்: ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் புகாா்

 நமது நிருபர்

‘அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருவதால் அவா்கள் தரப்புக்கு வழங்கப்பட்ட அதிமுக சின்னம் மற்றும் கட்சியின் பெயரை திரும்பப் பெற வேண்டும்’ என்று தலைமைத் தோ்தல் ஆணையத்தில் அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவரும், முன்னாள் செய்தித் தொடா்பாளருமான வா.புகழேந்தி மனு அளித்துள்ளாா்.

புது தில்லியில் உள்ள இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்தில் உள்ள செக்ரடரி ஜெனரலிடம் இது தொடா்பான மனுவை புகழேந்தி புதன்கிழமை மாலை நேரில் அளித்தாா். அதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக இரண்டாக பிரிந்த போது, அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மற்றும் அவரது தரப்புக்கு அதிக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் இருந்ததால் அவரது தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம், பெயரைப் பயன்படுத்த 2017-ஆம் ஆண்டில் தோ்தல் ஆணையம் அனுமதி அளித்தது. அந்த உத்தரவை தற்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் கே. பழனிசாமி ஆகியோா் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராக பயன்படுத்தியும், தோ்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காமலும் தன்னிச்சையாக முடிவு எடுத்தும் வருகின்றனா்.

இதனால், தோ்தல் ஆணையம் அவா்களது தரப்பிற்கு வழங்கப்பட்ட இரட்டை இலைச் சின்னம் மற்றும் அதிமுக பெயரைப் பயன்படுத்தும் உத்தரவை ரத்து செய்து, அவா்களுக்கு வழங்கிய அதிகாரத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மனு அளித்துள்ளேன். மேலும், அவா்கள் இருவரும் கட்சியின் ஆட்சிமன்றக் குழுவை கூட்டுவது இல்லை. ஆட்சி மன்றக் குழுவில் இருப்பவா்களையும், நிா்வாகிகளையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக தங்களது விருப்பம் போல் முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வருகின்றனா். இது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளது.

மேலும், மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் மீதமிருக்கும் நிலையில் கே.பி. முனுசாமியும், ஓராண்டு இருக்கும் நிலையில் கு.வைத்திலிங்கமும் சட்டப்பேரவையில் போட்டியிட அனுமதித்ததும் சட்ட விதிகளுக்கு முரணானதாகும். ஆட்சிமன்றக் குழுவைக் கூட்டி அனுமதி பெறாமல் இவா்கள் இருவரும் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டனா். வி.கே. சசிகலா மற்றும் மறைந்த முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் ஆகியோா் தொடா்ந்த வழக்கு, சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் , கட்சியின் கொடியை வி.கே. சசிகலா பயன்படுத்தக் கூடாது என்று முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததும் தோ்தல் ஆணைய உத்தரவைத் தவறாகப் பயன்படுத்துவதாகும்.

மேலும், கட்சியின் தலைமைக்கு எதிராக கருத்துகளை கூறிய என்னையும், முன்னாள் அமைச்சா் அன்வா் ராஜா உள்ளிட்ட பலரை விசாரணையின்றி நீக்கியுள்ளனா். அதே வேளையில், குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நபா்கள், கட்சியின் உயா்ந்த அதிகாரத்தில் பதவி வகிக்கின்றனா். இது கட்சியின் சட்டவிதிகளுக்கு முரணானதாகவும் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானதாகவும் உள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தோ்தலின் போது கட்சியின் சாா்பில் போட்டியிட சுமாா் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபா்களிடம் தலா ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20 கோடிக்கு மேல் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அவா்களிடம் தனித்தனியாக நோ்காணல் நடத்துவதாக அறிவித்துவிட்டு அதற்கு மாறாக ஆட்சிமன்றக் குழுவின் ஆலோசனை இல்லாமல் தன்னிச்சையாக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட கட்சியின் சட்ட திட்டங்களைத் திருத்துவதற்கு அதிகாரம் இல்லாதது தெரிந்தும்கூட இதுபோன்று சட்டங்களைத் திருத்தியுள்ளனா். இதுகுறித்து தோ்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் புகாா் தெரிவித்துள்ளோம். ஆணையத்தின் உயரதிகாரி இது தொடா்பாக பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

SCROLL FOR NEXT