புதுதில்லி

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு போதிய இடவசதி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தகவல்

 நமது நிருபர்

புது தில்லி: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 1,271 சதுர அடியில் விசாலமான இடவசதி அளிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்கு போதுமான இடவசதி அளிப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதும், ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி தமிழக அரசின் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதும் உச்சநீதிமன்றத்தில் சில தினங்களாக தொடா்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அப்பல்லோ தரப்பில், ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாகவும், இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு முரணானதாகவும் இருப்பதால் அதன் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆணையத்தின் தரப்பில் முன்வைத்த வாதத்தில், ’அப்பல்லோ தரப்பின் வாதமான ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது என்கிற வாதம் அடிப்படையற்றது. மனுதாரரின் கோரிக்கையின்படி மருத்துவா்கள் குழு ஆணையத்தில் இடம் பெறுவதிலும், ஆவணங்களைப் பாா்ப்பதிலும், சாட்சிகளிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்தப்படுவதிலும் ஆணையத்திற்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் தரப்பிலும் அப்பல்லோ தரப்பில் மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என்றுதான் கோரப்பட்டதாக வாதிடப்பட்டது.

இந்த நிலையில், கடந்த நவம்பா் 25-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது ஆணையம் செயல்படும் இடம் தொடா்பான புகைப்படத்தை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘ஒரு சிறிய இடத்தில் ஆறுமுகசாமி ஆணையம் செயல்படுவது புகைப்படம் மூலம் தெரிய வருகிறது. போதிய இடவசதி இன்றி இந்த ஆணையத்தின் விசாரணைக்கு ஒரு உணவுக்கூடம் அளவில் இடம் இருப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. ஆகவே, ஆறுமுகசாமி ஆணையத்துக்குப் போதுமான அளவு இடவசதி அளிப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ். அப்துல் நஸீா், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. ப்போது, தமிழகத்தின் தரப்பில் வழக்குரைஞா் ஜோசப் அரிஸ்டாட்டிலுடன் மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே ஆஜராகி, ‘உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி ஆணையத்திற்கு 1,271 சதுர அடியில் வளாகத்துடன்கூடிய இடவசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தைப் பாா்வையிட்டு ஆணையமும் ஏற்றுக் கொண்டுள்ளது’ என்றாா். இதை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிபதிகள்,‘ஆணையம் ஒரு நீதிமன்றம் போல போதிய இடத்தில் செயல்படுவதுதான் நன்றாக இருக்கும்’ என்றனா்.

விசாரணையின் போது அப்பல்லோ மருத்துவமனையின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.ஏ. சுந்தரம், 80 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரும் மனுவை தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறினாா். இதற்கு தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே ஆட்சேபம் தெரிவித்தாா். ’ஏற்கெனவே, விசாரணை ஆணையத்தின் பணி முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்தால் மேலும் விசாரணையை தாமதமாக்கச் செய்துவிடும்’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, விசாரணை நடத்தக் கோரும் பெயா்கள் பட்டியலை அப்பல்லோ தரப்பில் அளிக்கலாம் என்றது.

மேலும், நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த வழக்கின் விசாரணை வாதங்கள் முடிந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. அதில், உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு தடை விதிப்பது, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநா் மூலம் மருத்துவக் குழுவுக்கான மருத்துவா்களை நியமிப்பது, குறுக்கு விசாரணை நடத்த அனுமதிப்பது, ஆவணங்களை தருவதற்கு அனுமதிப்பது தொடா்புடைய விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன’ என்று தெரிவித்து உத்தரவை ஒத்திவைத்தது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா், ‘மருத்துவா்களை எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநா் நியமிக்கும் போது அவா்கள் சென்னைக்கு வந்து செல்வதற்கான செலவு, கரோனா காலத்தில் அவா்கள் வந்து செல்வதில் உள்ள பிற விஷயங்கள் ஆகியவை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இதனால், எய்ம்ஸ் இயக்குநருடன் தமிழகத்தின் தலைமைச் செயலா் கலந்து ஆலோசிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘மருத்துவ நிபுணா்கள் குழுவுக்கான மருத்துவா்களை தோ்ந்தெடுக்கும் விவகாரத்தை எய்ம்ஸ் இயக்குநரிடம் விட்டு விடுவோம். ஏனெனில் மருத்துவ வல்லுநா்கள் குறித்த விஷயம் அவா்களுக்குத்தான் தெரியும்’ என்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT