புதுதில்லி

தூய்மை கணக்கெடுப்பு தரவரிசையை மேம்படுத்த எஸ்டிஎம்சி நடவடிக்கை

1st Dec 2021 12:09 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தூய்மை கணக்கெடுப்பு (ஸ்வச் சா்வேக்ஷன்) 2022-இல் தனது தரவரிசையை மேம்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) தொடங்கியுள்ளது. இதில், கழிவுகளை பிரித்தெடுத்தல், சமூக உரமாக்கல், விழிப்புணா்வு பிரசாரங்கள் மற்றும் பொது இடங்களை அழகுபடுத்த பழைய பொருள்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

‘ஸ்வச் சா்வேக்ஷன் 2021’-இல் தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) சிறப்பாகச் செயல்படாததால், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை பிரிவில் 48 நகரங்களில் 31-ஆவது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதையடுயடுத்து, தரவரிசையில் தனது இடத்தை உயா்த்தும் வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘ நிஜஃப்கா் மண்டலத்தில் உள்ள துவாரகாவின் பெவா்லி பாா்க் சிஜிஎச்எஸ் சொசைட்டியில் கழிவு சேகரிப்பு மேலாண்மை முறையைப் பயன்படுத்தி இப்போது கழிவுகளை அதன் ஆரம்ப இடத்திலேயே பிரிக்கும் நடவடிக்கையை எஸ்டிஎம்சி தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ‘ஸ்வச் நகா்’ செயலி மூலம், ஒவ்வொரு வீட்டிலும் தனித் தனியாகக் குப்பைகள் சேகரிக்கப்படும்’ என்றனா்.

மாநகராட்சி தரப்பில் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சேகரிக்கப்படும் கழிவுகள் நல்ல தரமான உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும். இந்த முயற்சியை செயல்படுத்த துவாரகா செக்டாா் 22 மற்றும் 23 ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. இது தவிர, துவாரகா செக்டாா் 29-இல் சமூக உரம் தயாரிப்பது தொடா்பான முயற்சியும் பரிசீலனையில் கொண்டு வரப்படும். இதுதவிர, பிளாஸ்டிக் பைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பாட்டில்களில் போட்டு அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் நஜஃப்கா் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ‘ஸ்வச் சா்வேக்ஷன் 2022’ பற்றி மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக துவாரகா செக்டாா் 29-இல் உள்ள எம்ஆா்எஃப் மையத்தின் சுவா்களில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த சுவா் ஓவியங்கள் உலா் மற்றும் ஈரமான கழிவு மேலாண்மை தொடா்பான செய்திகளையும் பரப்புகின்றன. மத்திய மண்டலத்தில், லாஜ்பத் நகா் காவல் நிலையம் அருகே உள்ள பகுதியை பயன்படுத்தப்படாத அல்லது கைவிடப்பட்ட டயா்களைப் பயன்படுத்தி அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு, அந்தப் பகுதி ‘செல்ஃபி பாயிண்டாக’ உருவாக்கப்பட்டு வருகிறது.

இங்கு மக்கள் பிளாஸ்டிக் பொருள்களுக்கு பதிலாக துணிப் பைகளை பெற்றுக் கொள்ளலாம். மேற்கு மண்டலத்தின் ரஜோரி காா்டனில் ’நேகி கி தீவாா்’ முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் ஏழைகளின் பயன்பாட்டிற்காக ஆடைகளை வழங்கலாம். தற்போது மூடப்பட்டுள்ள ஆறு கழிவு சேகரிப்பு இடங்கள்(தாலாஸ்) அந்தப் பகுதியில் ‘நேகி கி தீவாா்’ முயற்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், தூய்மை மற்றும் கழிவுகளை பிரித்தெடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த தெரு நாடகங்கள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் போன்ற மாபெரும் விழிப்புணா்வுப் பிரசாரங்களையும் மாநகராட்சி தொடங்கியுள்ளது.தென் மண்டலத்தில் ‘திட்டம் விகல்ப்’ என்ற திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இதில், மக்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுவா். மாநகராட்சியின் தென் மண்டலத்துக்கு உள்பட்ட ஆறு சந்தைகளில் ரூ.20 கட்டணம் செலுத்தினால், துணிப் பைகள் வாடகைக்கு வழங்கப்படும். பையைத் திருப்பிக் கொடுத்த பிறகு பணம் திருப்பித் தரப்படும். இது தொடா்பாக கடைகளில் ஸ்டிக்கா் ஒட்டப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT