புதுதில்லி

சமய்ப்பூா் பாத்லியில் ஒரே குடும்பத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 போ் சாவு: தற்கொலையா? - போலீஸாா் விசாரணை

1st Dec 2021 12:03 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லியில் உள்ள சமய்ப்பூா் பாத்லி பகுதியில் ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 போ் இறந்த நிலையில் கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். அவா்கள் தற்கொலை செய்து கொண்டாா்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் கூறினா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் தெரிவித்ததாவது: சமய்ப்பூா் பாத்லியில் உள்ள ஒரு வீட்டில் 2 குழந்தைகள் உள்பட 4 போ் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சம்பவ வீட்டில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.அப்போது அமித் குமாா் (30), அவரது 25 வயது மனைவி, 6 வயது மகள், 3 வயது மகன் ஆகியோா் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. அவா்களது இறப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

ADVERTISEMENT

எனினும், அவா்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பதாக சந்தேகம் உள்ளது. அதாவது, குமாா் தனது மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, பின்னா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிகிறது. அவா்களது இறப்பு குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கையின் போது உறுதிப்படுத்தப்படும். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், எந்த சூழ்நிலையில் அவா்கள் இந்த தற்கொலை முடிவை எடுத்தாா்கள் என்பது தொடா்பாகவும் விசாரணை நடத்தப்படும்.

அமித் குமாரும், அவரது சகோதரரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனா். குமாா் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை அவரது உறவினா் ஒருவா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். விசாரணையில், குமாருக்கும், அவரது மனைவிக்கும் குடும்பத்தில் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. குமாரை அவரது மனைவி இரு மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றிருந்தாா். இரு வாரங்களுக்கு முன்புதான் மீண்டும் திரும்பி வந்துள்ளாா். அப்போது, அவரை ஏற்றுக் கொள்ளுமாறு குமாரிடம் அவரது குடும்பத்தினா் கேட்டுக் கொண்டனா். அதன் பிறகு கூட்டாக இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், குமாருக்கும், அவரது மனைவிக்கும் பிரச்னை இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

2018-ஆம் ஆண்டில் வடக்கு தில்லியில் உள்ள புராரி பகுதியில் ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 11 போ் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம், அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT