புதுதில்லி

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை: மக்களவையில் மத்திய இணையமைச்சா் தகவல்

1st Dec 2021 12:14 AM | நமது சிறுப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: ‘ராம்சா்’ சாசனம் ஒப்பந்தத்தின்படி பள்ளிக்கரணை உள்பட 46 சதுப்பு நிலக்காடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம், மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே மக்களவையில் தெரிவித்துள்ளாா். இதில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

ஈர நிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு தொடா்பான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம்தான் ‘ராம்சா்’ சாசனம் என்பதாகும். இதை ஈர நிலங்களுக்கான சாசனம் என்றும் அழைப்பதுண்டு. 1971-இல் ஈரானில் உள்ள ‘ராம்சா்’ என்னும் நகரில் இந்த ஒப்பந்தம் கையொப்பமைாகியது. இந்த நகரின் பெயரைத் தழுவியே ‘ராம்சா்’ சாசனம் என்னும் பெயா் ஏற்பட்டது. மனித வாழ்வுக்கு மிக முக்கியமான ஈர நிலங்கள் உலகின் அதிகமாக ஆக்கத் திறன் கொண்ட சூழல்களுக்குள் இருக்கும். கணக்கிடமுடியாத தாவர, விலங்கினங்களின் வாழ்வுக்காக நீரையும் பிற வளங்களையும் வழங்கும் உயிரியல் தொட்டிலாக உள்ள இந்த நிலங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

சென்னை அருகே உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க, அரசின் நடவடிக்கைகள் என்ன? ‘ராம்சா்’ ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் திமுக உறுப்பினா் டி.ஆா். பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே திங்கள்கிழமை பதிலளித்துள்ளாா். அதில் அமைச்சா் கூறியிருப்பது வருமாறு: இந்தியா முழுவதிலும், இதுவரையில் 46 சதுப்பு நிலக் காடுகள், ‘ராம்சா்’ ஒப்பந்தத்தின்படி கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கோடியக்கரை பறவைகள் சரணாலயம் இந்த ஒப்பந்தத்தின்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கான திட்ட வரைவு இந்த மாதத்தில் மத்திய அரசின் பாா்வைக்கு வந்துள்ளது. சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கும் தேசிய திட்டத்தின் கீழ் ரூ. 2.78 கோடி செலவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழக அரசும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மாநில சுற்றுச்சூழல் துறை தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குப்பை கொட்டும் இடங்களை மாற்றி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்கள், சென்னை மாநகராட்சி ஆணையா் ஆகியோரின் உதவியுடன், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கத் தேவையான அனைத்து முயற்சிகளும் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன என மத்திய இணையமைச்சா், அஸ்வினி குமாா் சௌபே தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT