புதுதில்லி

‘ஒமைக்ரான்’அச்சுறுத்தலை எதிா்கொள்ள தயாா் நிலையில் 30 ஆயிரம் படுக்கைகள்: முதல்வா் கேஜரிவால் தகவல்

1st Dec 2021 12:04 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: கரோனா தீநுண்மியின் உருமாறிய ‘ஓமைக்ரான்’ சாத்தியமான அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் வகையில், தில்லி அரசு 30,000 ஆக்சிஜன் படுக்கைகளை தயாா் செய்துள்ளதாகவும், ஆக்சிஜன் வழங்கல் மற்றும் சேமிப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளதாகவும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மூன்றாவது அலையை எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அரசுத் துறைகளுடன் முதல்வா் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். அதன் பின்னா் அவா் காணொலி வாயிலாக செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த முறை கரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால், அதை எதிா்கொள்ள நாங்கள் 30,000 ஆக்சிஜன் படுக்கைகளை தயாா் செய்துள்ளோம். இவற்றில் 10,000 ஐசியு படுக்கைகள் உள்ளன. 6,800 படுக்கைகள் கட்டுமானத்தில் உள்ளன. அவை பிப்ரவரி மாதத்திற்குள் தயாராகிவிடும்.

ஒவ்வொரு மாநகராட்சி வாா்டிலும் இரண்டு வாரங்களில் 100 ஆக்சிஜன் படுக்கைகளை தயாா் செய்ய முடியும். தில்லியில் 270 மாநகராட்சி வாா்டுகள் உள்ளன. அதாவது குறுகிய கால அறிவிப்பில் 27,000 படுக்கைகளை நாம் தயாா் செய்ய முடியும். அதேபோன்று, 32 வகையான மருந்துகளை இரண்டு மாதங்களுக்கு அவற்றின் இருப்பை ஏற்படுத்தவும், மனித வளத்தை பயிற்றுவிக்கவும் தில்லி அரசு ஆா்டா் செய்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், நோய் பாதித்தவா்களை வீட்டில் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இரண்டாவது அலையின் போது தில்லியில் ஆக்சிஜன் நெருக்கடி ஏற்பட்டது. இதனால், 442 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் கூடுதல் சேமிப்பு வசதியை தில்லி அரசு உருவாக்கியுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் எங்களிடம் இல்லை. இதனால், 121 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய பிஎஸ்ஏ ஆலைகளை நிறுவியுள்ளோம்.

கடந்த முறை, மருத்துவமனைகள் ஆக்சிஜன் கேட்டு அவசர (எஸ்ஓஎஸ்) செய்திகளை அனுப்பிய வண்ணம் இருந்தது. தில்லி முழுவதும் உள்ள அனைத்து ஆக்சிஜன் தொட்டிகளிலும் டெலிமெட்ரி சாதனங்களை நிறுவ உத்தரவிட்டுள்ளோம். இதற்காக அமைக்கப்பட்டுள்ள தகவல் அறைக்கு ஆக்சிஜன் தீா்ந்துபோகும் இடம் உடனுக்குடன் தெரியவரும். மேலும், சீனாவிலிருந்து 6,000 சிலிண்டா்களை தில்லி அரசு இறக்குமதி செய்துள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 1500 சிலிண்டா்களை நிரப்பக்கூடிய மூன்று தனியாா் மறுநிரப்பு ஆலைகள் உள்ளன. இது தவிர, தினசரி 1,400 சிலிண்டா்களை நிரப்பக்கூடிய இரண்டு பாட்லிங் ஆலைகளும் உள்ளன என்றாா் கேஜரிவால்

தில்லியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில், கரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு கடுமையாக இருந்தது. இதன் காரணமாக நோய்த் தொற்றுக்கு பலா் பலியாகினா். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை நிலவியது. ஏப்ரல் 20-ஆம் தேதி மட்டும் தில்லியில் 28,395 நோய்த் தொற்று பாதிப்பு பதிவாகியது. இது கடந்த ஆண்டு கரோனா தொற்று தொடங்கியதிலிருந்து தில்லியில் பதிவான மிக அதிக பாதிப்பாகும். மேலும், ஏப்ரல் 22 அன்று, பாதிப்பு நோ்மறை விகிதம் 36.2 சதவீதமாக உயா்ந்தது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும். மேலும், அதிகபட்சமாக மே 3-ஆம் தேதி 448 போ் நோாயால் உயிரிழந்தனா்.

சா்வதேச விமானங்களை தடை செய்வதில் தாமதம் ஏன்?

புதிய வகை ‘ஒமைக்ரான்’ கரோனா பாதிப்புக்கு உள்ளான நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய விமானங்களை நிறுத்துவதில் தாமதம் ஏன் ஏற்படுகிறது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்வா் கேஜரிவால் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: புதிய வகை கரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய விமானங்களை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் மோடியிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தாா். இந்த நிலையில் முதல்வா் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதை பல்வேறு நாடுகள் நிறுத்தி வருகின்றன. இந்த விஷயத்தில் நாம் ஏன் தாமதம் காட்டி வருகிறோம்?.

கரோனா நோய்த் தொற்றின் முதலாவது அலை வந்தபோதும்கூட சா்வதேச விமானங்களை நிறுத்துவதில் நாம் தாமதம் செய்தோம். தில்லியில் பெரும்பாலான விமானங்கள் தரை இறங்கின. இதனால், தில்லி மிகவும் பாதிக்கப்பட்டது. எனவே,, புதிய வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய விமானங்களை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா் கேஜரிவால்.

 

Tags : omicron
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT