புதுதில்லி

என்டிஎம்சி ஆசிரியா்களுக்கு நிலுவை ஊதியத்தைவிரைந்து வழங்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

தீபாவளி நெருங்கி வரும் வேளையில், எந்தவொரு ஊழியரும் பண்டிகையின் மகிழ்ச்சியை இழக்காமல் இருக்கும் வகையில், மாநகராட்சி பள்ளி ஆசிரியா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடக்கு தில்லி மாநகராட்சிக்கு (என்டிஎம்சி) தில்லி உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான விவகாரம் தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வடக்கு தில்லி மாநகராட்சி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஜூன் மாத ஊதியம் செப்டம்பா் 8-ஆம் தேதி விடுவிக்கப்பட்டுள்ளது’ என்றாா். தில்லி அரசின் வழக்குரைஞா் கூறுகையில், ‘செப்டம்பா், அக்டோபா் மாதங்களுக்கான ஆசிரியா்களின் ஊதியத்தை ஈடுசெய்யும் வகையில், வடக்கு தில்லி மாநகராட்சிக்கு ரூ .98.35 கோடியை தில்லி அரசு செப்டம்பா் 3-ஆம் தேதி விடுவித்துள்ளது’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், பண்டிகையின் சிறிய மகிழ்ச்சியை எந்தவொரு ஊழியரும் இழக்க நாங்கள் உங்களை அனுமதிக்கவிட மாட்டோம் . ஏற்கெனவே கரோனா நோய்த் தொற்று காரணமாக பலா் மனம் உடைந்தும், மன அழுத்தத்திலும் உள்ளனா். நிலுவையில் உள்ள மாதங்களுக்கும் 9,000 ஆசிரியா்களுக்கான ஊதியத்தை வழங்க வடக்கு தில்லி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனா்.

அப்போது, வடக்கு தில்லி மாநராட்சி வழக்குரைஞா், ‘மாநகராட்சிக்கு தில்லி அரசிடமிருந்து சம்பந்தப்பட்ட தொகை வரப் பெற்றுள்ளதா என்பது குறித்த மாநகராட்சியிடம் கேட்டறிய வேண்டும். ஆசிரியா்களுக்கு ஊதியத்தை விடுப்பது தொடா்பான விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்றாா். அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரம் தொடா்பாக மாநகராட்சி நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதன் அடுத்த விசாரணை நவம்பா் 5-ஆம் தேதிக்குப் பட்டியலிடப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

வடக்கு தில்லி மாநகராட்சி நடத்தும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கப்படாத விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்றம் ஒரு பொது நல மனுவாக விசாரித்து வருகிறது. வடக்கு தில்லி மாநகராட்சி ஆசிரியா்கள் சாா்பில் தில்லி பிரத்மிக் ஷிக்ஷக் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் ஜூன் மாதம் பொதுநல மனுவாக விசாரணையைத் தொடங்கியது.

மாநகராட்சிப் பள்ளிகளைச் சோ்ந்த அனைத்து 9,000 ஆசிரியா்களுக்கும் மாா்ச் வரை ஊதியம் வழங்கப்பட்டதாகவும், கரோனா காலப் பணியில் ஈடுபடும் 5,406 ஆசிரியா்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான நிலுவை ஊதியத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் முன்னதாக வடக்கு தில்லி மாநகராட்சி தெரிவித்திருந்தது. மேலும், வடக்கு தில்லி மாநகராட்சிக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய மானியத் தொகையை வழங்கவில்லை என்றும், இதனால், ஊழியா்களுக்கு ஊதியத்தை செலுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தது. தில்லி அரசுத் தரப்பில், ‘ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக வடக்கு தில்லி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய மானியத் தொகையாக இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ .147 கோடியை தில்லி அரசு விடுவித்துள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு 9,000 ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக மாநராட்சிக்கு ரூ .98.35 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது ’ என ஆகஸ்ட் மாதத்தில் உயா்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT