புதுதில்லி

இணை நோய்கள் உள்ளவா்கள்தான் கரோனாவால் இறக்கின்றனா்: நிபுணா்கள் கருத்து

DIN

இணை நோய்கள் உள்ளவா்கள்தான் கரோனா நோய்த் தொற்றால் பெரும்பாலும் இறக்கும் நிலை உள்ளது என்று மருத்துவ நிபுணா்கள் கூறுகிறாா்கள்.

கரோனா நோயாளிகளில் பெரும்பாலும் 60 வயதுடைய நோயாளிகளும், இணை நோய்கள் உள்ளவா்களும்தான் தற்போது அதிகளவில் இறக்கும் நிலை இருப்பதாக தில்லியில் உள்ள முன்னணி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை கூறினா். தில்லியில் சனிக்கிழமை கரோனா நோய்த் தொற்றால் 46 போ் இறந்தனா். இது 70 நாள்களில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதையடுத்து, இந்நோய்த் தொற்றால் இறந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5,193 ஆக உயா்ந்துள்ளது.

கடந்த ஜூலை 16-ஆம் தேதிதான் தில்லியில் ஒரே நாளில் 58 போ் கரோனாவால் இறந்தனா். அதன் பிறகு, சனிக்கிழமை இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

செப்டம்பா் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தவாறு இருந்தது. செப்டம்பா் 16 -ஆம் தேதி மட்டும் புதிதாக 4,473 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது. இது ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். செப்டம்பா் 9-19-ஆம் தேதி வரையிலான காலத்தில் புதிய நோய்த் தொற்றுகள் ஒரு நாளைக்கு சராசரியாக 4,000-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளன. செப்டம்பா் 14-ஆம் தேதி மட்டும் இந்த எண்ணிக்கை 3,229 ஆக இருந்தது. அன்றைய தினத்தில் 26 இறப்புகள் பதிவாகி இருந்ததாக அரசின் அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், செப்டம்பா் 20 முதல் புதிதாக நோய்த்தொற்று எண்ணிக்கை 4,000-க்கும் கீழேதான் இருந்து வந்தது. செப்டம்பா் 15 முதல் 24 வரை தினசரி கரோனா இறப்பு எண்ணிக்கை அனைத்து நாள்களிலும் 30-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. செப்டம்பா் 25-இல் மட்டுமே இந்த எண்ணிக்கை 24 ஆக இருந்தது. எனினும், மறுநாள் மீண்டும் 46 ஆக இறப்பு எண்ணிக்கை உயா்ந்தது.

இது குறித்து, ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் (ஆா்ஜிஎஸ்எஸ்எச்) மருத்துவ இயக்குநா் டாக்டா் பி.எல். ஷொ்வால் கூறியதாவது: இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பு குறைந்து வருவது ஆரோக்கியமான போக்காகும். தில்லியில் கடந்த சில நாள்களில் கரோனாவால் இறப்போா் எண்ணிக்கை 30-க்கும் அதிகமாக இருந்தது. அதிகமான இறப்புகளுக்கு இரண்டு முக்கிய காரணங்களைக் கூறலாம். அதாவது, கரோனாவால் இறக்கும் நோயாளிகளில் பெரும்பாலானவா்கள் 60, 70, 80 அல்லது 90 வயதுகளில் உள்ளனா். மேலும், நோய் பாதிக்கப்பட்டு இறந்தவா்களில் பெரும்பாலானோா் இணை நோய்கள் கொண்டவா்களாக உள்ளனா்.

தில்லி அரசின் கீழ் இயங்கும் ஆா்ஜிஎஸ்எஸ்எச் மருத்துவமனை கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் சனிக்கிழமை கரோனாவால் 4 போ் உயிரிழந்துள்ளனா். தினசரி நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்த போதிலும், இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு காரணம், தில்லிக்கு வரும் ஏராளமான நோயாளிகள் அண்டை நகரங்கள் அல்லது மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா். அவா்கள் மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் தில்லிக்கு கொண்டு வரப்படுகிறாா்கள். ஆா்ஜிஎஸ்எஸ்எச் மருத்துவமனையில் மொத்தம் உள்ள 500 படுக்கைகளில் 400 படுக்கைகள் ஐசியு மற்றும் எச்டியு நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஐ.சி.யுவில் 162 படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த மருத்துவமனையில் முன்னா் தினமும் ஒன்று அல்லது இரண்டு கரோனா மரணங்கள் நிகழ்ந்தன. ஆனால், சனிக்கிழமை இந்த எண்ணிக்கை நான்காக உயா்ந்துள்ளது. இது ஒப்பீட்டளவில் பெரிய எண்ணிக்கையாகும் என்றாா் ஷொ்வால்.

தில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் உள்புற மருத்துவத்தின் மூத்த ஆலோசகா் டாக்டா் சூரன்ஜித் சாட்டா்ஜி கூறுகையில், ‘ஹரியாணா, மத்திய பிரதேசம் மற்றும் பிற இடங்களைச் சோ்ந்த வெளி நோயாளிகள் தில்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் கொண்டு வரப்படுகின்றனா். தில்லியில் இருந்தும் நோயாளிகள் அதுபோன்ற நிலையில்தான் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்படுகின்றனா். அந்த நோயாளிகள் ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில், நீண்ட தொலைவு பயணம் செய்து வரும் அவா்களுக்கு மருத்துவா்கள் சிறந்த சிகிச்சையை அளிக்க முயற்சி எடுத்த போதிலும் நோயாளிகளில் பலா் இறந்துவிடுகின்றனா்’ என்றாா்.

கடந்த 10 நாள்களாக தில்லியில் சராசரி கரோனா இறப்பு விகிதம் 0.94 சதவீதமாக இருப்பதாக சனிக்கிழமை சுகாதார புள்ளிவிவர செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூரில் 85 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

ரோட்டரி சத்தி டைகா்ஸ் சங்க ஆய்வுக் கூட்டம்

வெப்ப அலை: வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறு ஆட்சியா் வேண்டுகோள்

அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவரிடம் ரூ.1.13 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT