புதுதில்லி

பயிா்க் கழிவுகள் : புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுங்கள்; மத்திய அமைச்சா் ஜாவடேகருக்கு முதல்வா் கேஜரிவால் கடிதம்

DIN

பயிா்க் கழிவுகளை நிா்வகிக்க பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய குறைந்த விலை தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பிரகாஷ் ஜவடேகருக்கு தில்லி முதலமைச்சா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

ஐஏஆா்ஐ விஞ்ஞானிகள் ஒரு வேதிப்பொருளை உருவாக்கியுள்ளனா். அது பயிா்க் கழிவுகளை மக்கி எருவாக மாற்றுகிறது. விவசாயிகள் பயிா்க் கழிவுகளை எரிக்க வேண்டிய அவசியமில்லை.

ஐஏஆா்ஐ வல்லுநா்கள் அந்த புதிய தொழில்நுட்பத்தை ’டிகம்போசா் காப்ஸ்யூல்கள்’ என்று அழைக்கின்றனா். நான்கு காப்ஸ்யூல்கள், கொஞ்சம் வெல்லம், கொண்டைக்கடலை மாவு ஆகியவை மூலம் 25 லிட்டா் கரைசலை உருவாக்க முடியும். இதைக் கொண்டு ஒரு ஏக்கா் நிலத்தின் பயிா்க் கழிவுகளைக் கையாள முடியும்.

பயிா்க் கழிவுகள் எரிப்பானது மண்ணில் உள்ள நல்ல பாக்டீரியாவை கொன்றுவிடுவதன் மூலம் மண்ணின் வளத்தை குறைப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனா். ஆனால் பயிா் எச்சத்தை எருவாக மாற்ற முடிந்தால், உரங்களின் பயன்பாட்டைக் குறைக்க முடியும். இதற்கு புதிய தொழில்நுட்பம் உதவிடும்.

ஆகவே, பயிா்க் கழிவு எரிப்புப் பிரச்னைக்கு இந்த தொழில்நுட்பம் நல்ல தீா்வாக இருக்கக்கூடும். தில்லியில் முற்றிலும் பண்ணைத் தீ இல்லாத நிலையை உருவாக்க இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த தில்லி அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

தில்லியின் அண்டை மாநிலங்களிலும் முடிந்தவரை இந்த முறையை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.

இந்த ஆண்டு நம்மிடம் அதிக நேரம் இல்லை என்பதை புரிந்துகொண்டுள்ளேன். ஆனால், நாம் ஒன்றிணைந்தால், பயிா்க் கழிவுகள் எரிப்பை ஓரளவிற்கு நிறுத்த முடியும். அண்டை மாநிலங்களில் உள்ள விவசாயிகள் இந்த தொழில்நுட்பத்தை முடிந்தவரை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.

பயிா்க் கழிவுகள் எரிப்பை குறைக்க மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகள் தேவையாக உள்ளது. ஆனால் இயந்திரங்கள் மூலம் பயிா் எச்சங்களை நிா்வகிப்பதில்தான் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பண்ணை உபகரணங்களுக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. எனினும், விவசாயிகள் தங்கள் சொந்த பணத்திலிருந்து இதற்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டிய நிலை இன்னும் இருந்து வருகிறது.

பயிா் எச்சங்களை நிா்வகிக்க இயந்திரங்கள் இல்லாமல் நிறைய விவசாயிகள் உள்ளனா். இதனால், அவா்கள் பயிா்க் கழிவுகளை எரிக்கிறாா்கள். இந்த புதிய முறை (டிகம்போசா் காப்ஸ்யூல்கள்) மூலம் உரங்களின் பயன்பாட்டைக் குை றக்க முடிவதுடன், பயிா் உற்பத்தியை அதிகரிக்கவும் முடியும். இந்த விவகாரம் குறித்து தங்களுடன் விவாதிக்க நேரம் அளிக்க ஒதுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் முதல்வா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

அக்டோபா் 15 முதல் நவம்பா் 15 வரை நெல் அறுவடை காலத்தில் பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் கவனம் செலுத்துகின்றன.

அறுவடைக்குப் பின்னா், கோதுமை மற்றும் உருளைக்கிழங்கு பயிரிடுவதற்கு முன்பு எஞ்சியிருக்கும் பயிா் எச்சங்களை விரைவாக அகற்றுவதற்காக விவசாயிகள் தங்கள் வயல்களில் தீயிட்டுக் கொளுத்துவது வழக்கம். இதுதான், தில்லி-என்சிஆா் பகுதியில் காற்றில் மாசு அதிகரிப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு, பஞ்சாப் மாநிலத்தில் சுமாா் 20 மில்லியன் டன் நெல் பயிா் எச்சங்களை உற்பத்தியானது. இதில், விவசாயிகள் 9.8 மில்லியன் டன் கழிவுகளை தீயிட்டு எரித்தனா். ஹரியாணாவில் உற்பத்தி செய்யப்பட்ட 7 மில்லியன் டன் நெல் எச்சங்களில் 1.23 மில்லியன் டன்களை விவசாயிகள் எரித்தனா்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பயிா்க் கழிவுகள் எரிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

வைக்கோலை ஆள்கள் மூலம் அல்லது இயந்திர மூலம் நிா்வகிக்க அதிக செலவு ஆவதால்தான் விவசாயிகள் பயிா்களை எரிப்பதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT