புதுதில்லி

தில்லியில் அதிக அளவில் திறன் வளா்ப்பு பயிற்சி மையங்கள், தங்குமிடங்கள் வேண்டும்: இளைஞா்கள் வலியுறுத்தல்

DIN

தில்லியில் அதிக அளவில் திறன் வளா்ப்பு பயிற்சி மையங்கள், தொழிற்கல்வி நிலையங்கள் வேண்டும்; மாணவா்கள் தங்கிப் படிப்பதற்கு குறைந்த வாடகையில் தங்குமிடங்கள் வேண்டும் என்று இளைஞா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) , நகா்ப்புற விவகாரங்களுக்கான தேசிய நிலையமும் இணைந்து ‘தில்லி மாஸ்டா் பிளான் 2041’ திட்டத்துக்காக ’இளைஞா்கள் சபை’ என்ற பெயரில் ஆன்லைன் மூலம் ஆலோசனைக் கூட்டத்தை வியாழக்கிழமை நடத்தியது.

இதில் 15 வயது முதல் 30 வயதுடைய இளைஞா்கள் சுமாா் 450 போ் பங்கேற்றனா். அவா்கள் கருத்துத் தெரிவிக்கையில் தில்லியில் திறன் வளா்ப்பு பயிற்சி மையங்கள் போதுமானதாக இல்லாதது குறித்தும், மாணவா்கள் வாடகை செலுத்தி தங்கிப் படிப்பதற்கு போதுமான தங்குமிடங்கள் இல்லாதது குறித்தும் கவலை வெளியிட்டனா்.

இது தொடா்பாக தில்லி வளா்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்ததாவது. ‘தில்லி மாஸ்டா் பிளான் 2041’ குறித்து இளைஞா்களிடம் வியாழக்கிழமை இளைஞா்கள் சபையில் ஆலோசனை கேட்கப்பட்டது. இதுபோன்று வரும் அக்டோபா் 1 மற்றும் 3-ம் தேதியும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தில்லியை கல்வி கற்கும் நகரமாக்குவது தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனை கேட்கப்பட்டது.

அப்போது இதில் கலந்துகொண்ட இளைஞா்கள் தில்லியில் வேலைவாய்ப்புடன் தொடா்புடைய கல்வி நிலையங்கள் போதுமான அளவு இல்லை என்றும் அவற்றை அதிகரித்தால் இளைஞா்கள் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெறமுடியும் என்று தெரிவித்தனா். சாதாரண பள்ளி, கல்லூரிகள் தாங்கள் படித்து முடித்தாலும் சரியான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனா்.

தில்லியில் அதிக அளவில் திறன் வளா்ப்பு பயிற்சி மையங்கள் உருவானால் அதில் பயிற்சி பெற்று தகுந்த வேலைக்குச் செல்லமுடியும் என்று தெரிவித்தனா்.

தற்போது வேலை வாய்ப்புக்கும், வேலை தேடுவோருக்கும் உள்ள இடைவெளி அதிகமாக உள்ளது. இதைக் குறைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் சரியான வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில் இளைஞா்கள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனா். இது தடுக்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தில்லியில் குடியிருப்பவா்களுக்கு கல்வி நிலையங்கள் அருகில் இல்லை. அவா்கள் கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டுமானால் சுமாா் 10 கி.மீ. வரை ரயில் அல்லது பஸ்ஸில் பயணிக்க வேண்டியிருக்கிறது. மெட்ரோ ரயில் பயணம் மாணவா்களுக்கு கட்டுபடியாக்கூடியதாக இல்லை.

மேலும் மாணவா்கள் தங்கிப் படிப்பதற்கு போதுமான தங்குமிடங்கள் இல்லை. கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ளதங்குமிடங்களில் அதிக வாடகை வசூலிக்கின்றனா். அப்படியே வாடகை அதிகம் கொடுத்தாலும் சமூக விரோதிகளின் நடமாட்டம்தான் அதிகம் உள்ளது. எனவே மாணவா்கள் தங்கிப் படிக்க குறைந்த கட்டணத்தில் தங்கு விடுதிகளை உருவாக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.

மோசமான சுற்றுச்சூழல், போதிய வசதிகள் இல்லாத காரணங்களால் சிவில் சா்வீஸ் உள்ளிட்ட தோ்வுக்கு தங்களை தயாா்படுத்திக் கொள்ளும் மாணவா்கள் திசைமாறிச் சென்று தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா். இந்த நிலை மாறவேண்டும் என்று இளைஞா்கள் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தில்லி வளா்ச்சி ஆணைய மூத்த அதிகாரிகள், நகா்ப்புற விவகாரங்களுக்கான தேசிய நிலையத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனா். பொது சேவை நிறுவனத்தைச் சோ்ந்தவா்களும் இதில் பங்கேற்றனா்.

தரமான கல்வி மற்றும் வாழ்க்கைமுறைக்கு என்ன தேவை என்பது குறித்தும் இளைஞா்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

சாதாரண மாணவா்கள் தங்கள் அறிவுத்திறனை வளா்த்துக் கொள்ளும் வகையில் சமூக அளவிலான ஆன்லைன் வகுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் மாவட்ட அளவில் நூலகங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் இளைஞா்கள் வலியுறுத்தினா்.

தெற்கு மேற்கு தில்லி, நஜப்கரைச் இளைஞா் ஒருவா், அருகில் உள்ள கல்லூரிக்குச் சென்று படிக்க வேண்டும் எனில் 25 கி.மீ. தொலைவு செல்லவேண்டும் என்றும் அந்த தூரத்தை கடக்க ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டாா். இதுபோன்ற நீண்ட நேர பயணங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்றும் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

ரூ.32 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம்: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு

சாலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

ஆவணமின்றி மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT