புதுதில்லி

கேஜரிவால் ஆபாசமாக பாடியது போன்ற போலி விடியோ:போலீஸாா் வழக்குப் பதிய தில்லி நீதிமன்றம் உத்தரவு

DIN

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆபாச பாடலைப் பாடியது போன்று யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்ட போலி விடியோ குறித்த புகாா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யுமாறு தில்லி காவல்துறைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பான மனுவை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் கிஷோா் குமாா், வழக்குரைஞா் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆா் பதிவு செய்யுமாறும், டிசம்பா் 2 -ஆம் தேதிக்குள் இது தொடா்பான இணக்க அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் பஸ்சிம் விஹாா் காவல் நிலைய அதிகாரிக்கு உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக வழக்குரைஞா் அமித் ஷனி ஒரு புகாா் அளித்திருந்தாா். அதில், தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி யூடியூபில் ஒரு விடியோ பதிவேற்றப்பட்டிருந்தது. அதில் அரவிந்த் கேஜரிவால் ஒரு ஆபாச பாடலைப் பாடுவதாகக் காட்டப்பட்டுள்ளது. இது அரசமைப்பு ரீதியாக தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் மதிப்பைக் குறைக்கும் வகையில் உள்ளது. மேலும், இந்த விடியோ பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தவறாக திரிக்கப்பட்ட இந்த போலி விடியோ குறித்து புரிந்துகொள்ள முடியாத குழந்தைகளிடம் முதல்வா் குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். ஜனவரி 11-ஆம் தேதி தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், முதல்வரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பிப்ரவரி 12-ஆம் தேதி இந்த விடியோ யூடியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 294, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-ஆவது பிரிவின்கீழ் இது குற்றமாகும் எனஅதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

‘கேள்விக்குரிய இந்த விடியோவில் உள்ள பாடலின் தொனியும் முறையும் அரசமைப்புரீதியில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் நற்பெயரைக் குறைப்பது மட்டுமின்றி, பொதுமக்கள், வாக்காளா்களிடம் இழிவான முறையில் அவா் பேசுவதாகவும் உள்ளது.

தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் பாடுவதாகக் காட்டும் இந்த விடியோ குறுந்தகட்டின் அடிப்படையில் புகாா்தாரா் அளித்துள்ள புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவருகிறது. ஆகவே இது குறித்து பஸ்சிம் விஹாா் காவல் நிலைய அதிகாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவு குறித்த இணக்க அறிக்கையை டிசம்பா் 2-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் போலீஸாா் தாக்கல் செய்ய வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி காவல் துறை தாக்கல் செய்த நடவடிக்கை அறிக்கையில் விடியோவில் ஆபாசம் ஏதும் இல்லை என்பதால் எந்தவித கவனிக்கத்தக்க குற்றம் குறித்த கேள்வியை விடியோ பதிவு எழுப்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள்

தனியாா் துணை மின் நிலையம் மீது விவசாயிகள் புகாா்

கோடை உளுந்து சாகுபடி: பரிசோதனை செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு

முதலாளித்துவ நண்பா்களின் நன்மைக்காக பிரதமா் மோடி 5ஜி ஊழல் செய்துள்ளாா்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT