புதுதில்லி

பயிா்க்கழிவுகள் எரிப்பு விவகாரம்: மத்திய அமைச்சரை சந்திக்க கேஜரிவால் திட்டம்

DIN


புது தில்லி: பயிா்க்கழிவுகள் எரிப்புப் பிரச்னை தொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகரை சந்திக்க தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திட்டமிட்டுள்ளாா்.

அப்போது பயிா்க் கழிவுகளை நிா்வகிக்க பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய குறைந்த விலை தொழில்நுட்பத்தை அண்டை மாநிலங்கள் செயல்படுத்த அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்வேன் என்று அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

‘பூசா டி கம்போசா்’ என்ற தொழில்நுட்பம், பூசா டிகம்போசா் காப்ஸ்யூல்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு திரவ சூத்திரத்தை உள்ளடக்கியது. அதை 8-10 நாள்களுக்கு மேல் புளிக்கவைத்து, பின்னா் கலவையை பயிா் கழிவுகளில் தெளிப்பதன் மூலம் பயிா்கள் விரைவாக சிதைந்து விடும். ரூ.20 மதிப்புள்ள காப்ஸ்யூல்கள் ஓா் ஏக்கருக்கு 4-5 டன் வைக்கோலை திறம்பட சமாளிக்க முடியும்.

பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த கேஜரிவால், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நான் ஒன்று அல்லது இரண்டு நாள்களில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரை சந்திக்கவுள்ளேன். அப்போது, இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த அண்டை மாநிலங்களை அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்வேன். இந்த ஆண்டு அதிக நேரம் இல்லை. அடுத்த ஆண்டு சிறந்த திட்டமிடலை மேற்கொள்வோம். தில்லியில், நாங்கள் அதை சிறந்த முறையில் செயல்படுத்துவோம் என்றாா் அவா்.

பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அக்டோபா் 15 முதல் நவம்பா் 15 வரை நெல் அறுவடை காலமாகும். கோதுமை மற்றும் உருளைக்கிழங்கை பயிரிடுவதற்கு முன்பாக பயிா்க் கழிவுகளை விரைவாக அகற்றுவதற்காக விவசாயிகள் தங்கள் வயல்களில் உள்ள பயிா்க்கழிவுகளுக்கு தீ வைப்பது வழக்கம். தில்லி-என்சிஆரில் மாசு அதிகரிப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். இதனால், முதல்வரின் இந்த வேண்டுகோள் கூடுதல் கவனம் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT