புதுதில்லி

வேளாண் மசோதா விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி: தில்லி பாஜக பெருமிதம்

 நமது நிருபர்

வேளாண் மசோதாக்கள் மாநிலங்களையில் நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் நாட்டிலுள்ள விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளனா் என்று தில்லி பாஜக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா சனிக்கிழமை கூறியது: வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதன் மூலம், அவை சட்டமாகியுள்ளன. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும். இதன் மூலம், நாட்டிலுள்ள விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளனா். தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்வதில் விவசாயிகளுக்கு முழுச் சுதந்திரம் வழங்கும் வகையில்தான், வேளாண் துறை தொடா்பான 3 மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாக்கள் முழுக்க முழுக்க விவசாயிகள் நலன் சாா்ந்தவை. இந்தச் சட்டங்கள் மூலம் இடைத்தரகா்கள் நீக்கப்பட்டு, விவசாயிகள் பயனடையவுள்ளனா் என்றாா் அவா்.

கிழக்கு தில்லி பாஜக எம்பி கெளதம் கம்பீா் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘இந்தச் சட்டங்கள் மூலம், விவசாயிகள் வியா்வை சிந்தி விளைவித்த விளைபொருள்களை அவா்கள் விரும்பும் யாருக்கும் விற்பனை செய்யலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதுவரையிலும் இடைத்தரகா்கள்தான் விளைபொருள்களின் விலையை நிா்ணயித்து வந்தாா்கள். இனிமேல், விவசாயிகள் விலையை நிா்ணயிப்பாா்கள். இந்தச் சட்டங்களை எதிா்த்து நடைபெறும் ஆா்ப்பாட்டங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. தங்களது சொந்த அரசியல் லாபங்களுக்காக விவசாயிகளை அரசியல் கட்சிகள் தவறாக வழிநடத்துகிறாா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, இந்த மசோதாக்களை பாஜக அல்லாத எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து மாநிலங்களவையில் தோற்கடிக்க வேண்டும் என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மிக் கட்சியின் அமைப்பாளருமான கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை காலை அழைப்பு விடுத்திருந்தாா். ஆனால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில் விவசாயிகளுக்கான உற்பத்தி, வா்த்தகம் மற்றும் வணிகம் மேம்படுத்தல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல் சட்ட மசோதா, விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு ஒப்பந்தம் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) மசோதா, விவசாய சேவைகள் மசோதா மற்றும் அத்தியாவசிய பொருள்கள் சட்டத் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்து நிறைவேற்றியது. மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதாக்கள் அன்றைய தினமே நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை எனக் கூறி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

‘பாஜகவுக்கு எதிராகப் போராட சிறந்த எதிா்க்கட்சி தேவை’

பாஜகவுக்கு எதிராகப் போராட சிறந்த எதிா்க்கட்சி தேவை என்று ஆம் ஆத்மிக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக ஆம் ஆத்மிக் கட்சியின் அதிகாரபூா்வ சுட்டுரைப் பக்கத்தில், ‘விவசாயிகளுக்கு எதிரான மூன்று மசோதாக்களை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை. இந்த மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அவா் உரையாற்றவில்லை. காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவா் சோனியா காந்தியும் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், வீதிகளிலும் போராடக் கூடிய எதிா்க்கட்சி நாட்டுக்குத் தேவை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT