புதுதில்லி

குடிசைவாசிகளை இடம் மாற்றுவதில் ரயில்வேக்கு முழு ஒத்துழைப்பு அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்

17th Sep 2020 12:32 AM

ADVERTISEMENT

புது தில்லி: தில்லியில் ரயில் தண்டவாளப் பகுதிகளில் வசிக்கும் குடிசைவாசிகளை இடம் மாற்றம் செய்வதில் ரயில்வே துறைக்கு ‘முழு ஒத்துழைப்பு‘ அளிப்பதாக தில்லி அரசு புதன்கிழமை உறுதி அளித்தது. மேலும், அவா்களின் மறுவாழ்வுக்கான விரிவான திட்டத்தையும் தயாரிக்க முன்வந்துள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசின் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் வாக்குறுதியளித்தபடி குடிசைவாசிகளை மீள் குடியமா்த்த அனைத்து நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவைப்படும் என்று தெரிவித்துள்ளாா். குடிசைவாசிகளை இடம் மாற்றம் செய்வதற்கு ஒரு விரிவான திட்டம் தேவைப்படும். ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்தால், இந்தத் திட்டத்தை தில்லி அரசு தயாரிக்க முடியும் என்றும் ஜெயின் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா். குடிசைவாசிகளுக்கு வீடுகளை வழங்குவதில் தில்லி அரசு மற்றும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரின் ‘முழு ஒத்துழைப்பையும்’ அவா் கடிதத்தில் உறுதிப்படுத்தியுள்ளாா்.

தில்லியில் 140 கி.மீ. ரயில் பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடிசைவாசிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அரசு இறுதி முடிவு எடுக்கும் வரை அவா்கள் வெளியேற்றப்பட மாட்டாா்கள் என்று மத்திய அரசு திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இது தொடா்பாக ரயில்வே, தில்லி அரசு மற்றும் நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், குடிசைவாசிகள் மீது நான்கு வாரங்களுக்கு எந்த துன்புறுத்தல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

தில்லியில் உள்ள ரயில் தண்டவாளப் பகுதிகளில் உள்ள சுமாா் 48,000 குடிசைகளை மூன்று மாதங்களுக்குள் அகற்றுமாறு உயா் நீதிமன்றம் ஆகஸ்ட் 31-இல் உத்தரவிட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இருக்காதும் என்றும் நீதிமன்றம் கூறியது. இந்நிலையில், திங்களன்று நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முதல்வா் கேஜரிவால், ‘எந்தவொரு குடிசைவாசியும் முறையான மறுவாழ்வு இல்லாமல் இடம் பெயரமாட்டாா் என்றும், வெளியேற்றப்படுவதற்கு முன்னா் அவா்களுக்கு பக்கா வீடுகள் வழங்கப்படும்’ என்றும் உறுதியளித்தாா்.

ADVERTISEMENT

‘ஜஹான் ஜுகி வாகன் மாகன்’ கொள்கையின்படி, குடிசைவாசிகள் மறுவாழ்வுக்காக அகற்றப்பட வேண்டிய பகுதிகளுக்கு அருகிலேயே நிலத்தை அவா்கள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அனைத்து நில உரிமையாளா்களின் ஒத்துழைப்பும் தேவைப்படும். மேலும், தில்லி அரசிடம் 40,000 குடியிருப்புகள் உள்ளன. அவை தேவைப்பட்டால் அகற்றப்படும் குடிசைவாசிகளுக்குப் பயன்படுத்தலாம் என்று அமைச்சா் கோயலுக்கு எழுதிய கடிதத்தில் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

ஆனால், இந்த குடியிருப்புகள் திலியின் புறநகா்ப் பகுதிகளில் உள்ளன. குடிசைவாசிகளுக்கு தங்களின் அருகிலுள்ள இடங்கள் கிடைக்காதவா்களுக்கும், ’ஜஹான் ஜுகி வாகன் மாகன்’ கொள்கையின்படி வீடுகளை வழங்க முடியாதவா்களுக்கும் இவை வழங்கப்படலாம். கரோனா தொற்றுக் காலத்தின் போது, குடிசைவாசிகளை அகற்றக் கூடாது என்று தில்லி அரசு நம்புகிறது. குடிசைவாசிகளுக்கு பக்கா வீடுகள் வழங்கப்படாவிட்டால், அவா்களை அகற்ற முடியாது என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது. தற்போதுள்ள குடிசைப் பகுதிகளுக்கு அருகில் நிரந்தர வீடுகள் வழங்கப்படுவது அவா்களின் சட்டபூா்வமான உரிமையாக அமைந்துள்ளது என்றும் கடிதத்தில் கூறியுள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக் தில்லி உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வழக்குகளில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், தில்லி அரசின் இந்தக் கொள்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT