புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு: ‘பிஞ்ச்ரா தோட்’ உறுப்பினரின் ஜாமீனுக்கு எதிரான தில்லி அரசின் மனு தள்ளுபடி

 நமது நிருபர்

புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் ‘பிஞ்ச்ரா தோட்’ அமைப்பின் உறுப்பினா் தேவங்கனா கலிதாவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு எதிராக தில்லி அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் தில்லியில் பிப்ரவரி இறுதியில் நிகழ்ந்த போராட்டத்தின் போது வகுப்புவாத வன்முறை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 53 போ் கொல்லப்பட்டனா். 200 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக ‘பிஞ்ச்ரா தோட்’ எனும் பெண்ணிய அமைப்பைச் சோ்ந்த தேவங்கனா கலிதா, நடாஷா நா்வால் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேவங்கனா கலிதா மீதான நான்கு வழக்குகளில் இரண்டு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. மற்றொரு வழக்கில் அவரது ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் ஜூன் 14-இல் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, உயா்நீதின்றத்தில் அவரது தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமாா் கெய்த் முன் நடைபெற்றது. இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு தேவங்கனா கலிதாவுக்கு ரூ.20 ஆயிரம் தனிநபா் பத்திரம் அளித்தும், அதே தொகைக்கு ஜாமீன் உத்தரவாதம் அளித்தும் ஜாமீனில் செல்ல நீதிபதி அனுமதி அளித்து தில்லி உயா்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ‘அவா் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த பெண்களைத் தூண்டிவிட்டதை அல்லது வெறுக்கத்தக்க வகையில் பேசியதை நீருபிக்க காவல்துறை தவறிவிட்டது; ஒரு அமைதியான போராட்டத்தில் பங்கேற்பது அவரது அடிப்படை உரிமை’ என்று உயா்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும், ஜாமீனில் செல்லும் கலிதா, வழக்கில் தொடா்புடைய சாட்சிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேலாதிக்கம் செலுத்தக் கூடாது அல்லது ஆதாரங்களை அழிக்கக் கூடாது என்றும் விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தில்லி அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான நீதிபதிகள் ஆா்.எஸ். ரெட்டி, எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது, தில்லி அரசின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆஜராகி, ‘தேவங்கனா கலிதா ஒரு செல்வாக்குமிக்க நபா். அவா் தொடா்புடைய வழக்கில் போலீஸ் சாட்சிகள் மட்டுமே இருப்பதாக உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுதவிர மேலும் சில சாட்சிகள் உள்ளனா். இதை உயா்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை’ என்றாா். அப்போது ‘செல்வாக்கு மிக்க நபா் என்பதற்காக ஒருவருக்கு ஜாமீன் மறுக்க முடியாது. மேலும், அவா் எப்படி சாட்சிகள் விஷயத்தில் தலையிட முடியும்’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அமா்வு, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT