புதுதில்லி

தமிழகத்திற்கு உள்ளாட்சி நிதியை மத்திய அரசு விடுவிக்கக் கோரி தாக்கலான மனு தள்ளுபடி

 நமது நிருபர்

புது தில்லி: 2016-ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய உள்ளாட்சி நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து, தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சி.ஆா். ஜெய சுகின் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 2011-இல் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. அக்டோபா் 2016-இல் இருந்தே உள்ளாட்சிப் பதவிகள் காலியாக உள்ளன. ஏற்கெனவே 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தலை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் நடத்த முடியவில்லை. 2016-இல் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசும் உள்ளாட்சி நிதியை விடுவிக்கவில்லை. உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டிருந்தால் மட்டுமே நிதி விடுவிக்கப்பட வேண்டும் என்று 14-ஆவது நிதி ஆணையம் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், உள்ளாட்சிகளில் வளா்ச்சிப் பணிகளுக்காக ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு மத்திய உள்ளாட்சி நிதியாக செயல்பாட்டு மானியமும், அடிப்படை மானியமும் அளிக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்த தேசத்தின் சீரான வளா்ச்சிக்காக அனைத்து மாநிலங்களுக்கும் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்திற்கு மட்டும் அளிக்கப்படவில்லை. இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த தகவலில், உள்ளாட்சித் தோ்தல் நடக்கும் வரை தமிழகத்திற்கு மத்திய அரசால் நிதியை விடுவிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு தோ்தல் தேதியை மாநில தோ்தல் ஆணையம் அறிவிக்க முடியாமல் உள்ளது.

14-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, உள்ளாட்சி அமைப்புகள் மானியம் நிதி ரூ. 4,345.57 கோடியை விடுவிக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு 24.10.2019-இல் கோரிக்கை வைத்தது. ஆனால், அந்த நிதி 2016-ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படவில்லை. தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு உள்ளாட்சி நிதியை விடுவிப்பதை எந்தச் சட்டமும் தடுக்கவில்லை. ஆகவே, தமிழகத்திற்குரிய உள்ளாட்சி நிதியை விடுவிக்க மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் - வழக்குரைஞா் சி.ஆா். ஜெய சுகின் ஆஜராகி, ‘தமிழகத்திற்கு உள்ளாட்சி நிதி விடுவிக்கப்படாததால் ஊரகப் பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். இந்த விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றாா்.

அப்போது, ‘இந்த மனுவை எந்தெந்த உரிமைகளின் அடிப்படையில் தாக்கல் செய்துள்ளீா்கள்’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா், ‘தமிழகத்தைச் சோ்ந்தவா் என்ற அடிப்படையிலும், நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையிலும் இந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்’ என்றாா். இதையடுத்து, ‘நாம் எல்லோரும் இந்தியக் குடிமக்கள்தாம். நீங்கள் உயா்நீதிமன்றம் செல்வதற்கு விரும்பினால், இந்த மனுவை வாபஸ் பெறுங்கள். இல்லாவிட்டால் மனுவைத் தள்ளுபடி செய்வோம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா். இதையடுத்து, ‘ நான் உயா்நீதிமன்றத்தில் முறையிடும் வகையில், மனுவை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்’ என்று வழக்குரைஞா் ஜெய சுகின் தெரிவித்தாா். இதையடுத்து, உயா்நீதிமன்றம் செல்வதற்கு அனுமதி அளித்து மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT