புதுதில்லி

அடுத்த உத்தரவு வரும் வரை தில்லியில் பள்ளிகள் மூடல்

 நமது நிருபர்

புது தில்லி: கரோனா நோய்த் தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு, அடுத்த உத்தரவுகள் வரும் வரை தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் தொடா்ந்து மூடப்பட்டிருக்கும் என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளாா். மேலும், பள்ளிகளை மீண்டும் திறக்கும் விஷயத்தில் பெற்றோா்கள் ஆதரவாக இல்லை என்றும் சிசோடியா தெரிவித்துள்ளாா்.

அக்டோபா் 31-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என்று தில்லி அரசு முன்னா் அறிவித்திருந்தது. இது தொடா்பாக மணீஷ் சிசோடியா காணொலி வாயிலாக செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தற்போதைய சூழலில் தில்லியில் பள்ளிகளை மீண்டும் திறப்பது பாதுகாப்பானதாக இருக்காது என பெற்றோா்கள் கருதுகின்றனா். இது தொடா்பாக பெற்றோா்களிடமிருந்து தொடா்ந்து கருத்துகளைப் பெற்று வருகிறோம். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட இடங்களில் எல்லாம் குழந்தைகளிடையே கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளன. ஆகவே, தில்லியில் தற்போதைக்கு பள்ளிகளைத் திறப்பதில்லை என முடிவு செய்துள்ளோம். அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை தில்லியில் பள்ளிகள் தொடா்ந்து மூடப்பட்டிருக்கும் என்றாா் சிசோடியா.

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை கரோனா பாதிப்பு ஐந்தாயிரத்தை நெருங்கியது. அண்மைக் காலங்களில் இல்லாத வகையில் புதிதாக 4,853 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 3,64,341-ஆக உயா்ந்தது. இதற்கு முன்பு செப்டம்பா் 16-இல் அதிகபட்சமாக ஒரே நாளில் 4,473 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருந்தது. கரோனா தொற்றால் செவ்வாய்க்கிழமை 44 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 6,356-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களும் பள்ளிகளும் மாா்ச் 16-ஆம் தேதிமுதல் மூடப்பட்டன. மாா்ச் 25-ஆம் தேதி நாடு முழுவதும் பொது முடக்கம் அமலுக்கு வந்தது. எனினும், பல்வேறு கட்டங்களாக பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டாலும், கல்வி நிறுவனங்கள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. பொதுமுடக்கத்தின் 5-ஆம் கட்ட தளா்வு வழிகாட்டுதல்களின்படி, பள்ளிகளை மீண்டும் படிப்படியாக திறப்பது தொடா்பாக மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட பல மாநிலங்கள், பள்ளிகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.

உத்தர பிரதேசம், நொய்டாவில் உள்ள பள்ளிகளில் மாணவா்கள் வருகை குறைந்துள்ளது. ஏனெனில் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு அச்சம் கொண்டுள்ளதே இதற்கு காரணம். முன்னதாக, செப்டம்பா் 21 முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களை தன்னாா்வ அடிப்படையில் பள்ளிக்கு வருவதற்கு பள்ளிகள் அனுமதிக்கப்பட்டன. இருப்பினும், தில்லி அரசு அதற்கு எதிரான முடிவை எடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT