புதுதில்லி

தில்லி தலைமைச் செயலா் மீதான தாக்குதல் வழக்கு: செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து

 நமது நிருபர்

புது தில்லி: 2018-இல் அப்போதைய தில்லி அரசின் தலைமைச் செயலாளா் அன்ஷு பிரகாஷை தாக்கியது தொடா்பான வழக்கில் சாட்சிகளில் ஒருவரின் வாக்குமூலத்தை வழங்குமாறு கோரிய முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஆகியோரின் மனுவை நிராகரித்த செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை ரத்துசெய்து உத்தரவிட்டது. மேலும், ‘எந்த ஆதாரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை போலீஸாா் தோ்வு செய்ய முடியாது’ என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

2018, பிப்ரவரி 19-இல் முதல்வா் கேஜரிவாலின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் நடந்த கூட்டத்தின் போது, அப்போதைய தலைமைச் செயலா் அன்ஷு பிரகாஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புகாா் எழுந்தது. அதன் பிறகு அன்ஷு பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது தொலைத் தொடா்புத் துறையின் கூடுதல் செயலாளராக உள்ளாா்.

அவா் மீதான தாக்குதல் வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் கேஜரிவால், சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 9 போ் ஆகியோருக்கு அக்டோபா் 25, 2018-இல் ஜாமீன் வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மற்ற இரு எம்எல்ஏக்களான அமானத்துல்லா கான் மற்றும் பிரகாஷ் ஜா்வால் ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உயா்நீதிமன்றத்தால் பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் சாட்சியாக சோ்க்கப்பட்ட வி.கே. ஜெயினிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை வழங்க உத்தரவிடக் கோரி முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் சிசோடியா தரப்பில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் 2019, ஜூலை 24-இல் நிராகரித்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால் உள்ளிட்டோா் தரப்பில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பிப்ரவரி 21, 2018-இல் பதிவு செய்யப்பட்ட வி.கே. ஜெயினின் வாக்குமூலத்தை அரசுத் தரப்பு நிறுத்தி வைத்தது. ஏனெனில், இது அரசுத் தரப்பு வழக்குக்கு பொருந்தாததாக இருந்ததாலும், மனுதாரா்களை பொய்யாக சிக்க வைக்க உதவியதாலும் இந்தச் செயலை காவல் துறை தரப்பு செய்துள்ளது. ஆகவே, அவரது வாக்குமூலத்தின் நகல் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது தில்லி அரசின் வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா தாக்கல் செய்த நிலவர அறிக்கையில், ‘பிப்ரவரி 21, 2018-இல் காவல் நிலையத்திற்கு

ஜெயின் அழைக்கப்பட்டாா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 161-ஆவது பிரிவின் கீழ், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை. இந்தப் பிரிவின் கீழ் 2018, பிப்ரவரி 22, மற்றும் 2018, மே 9 ஆகிய தேதிகளில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்து.

இந்த வழக்கை விசாரித்த தில்லிஉயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கைத் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் தில்லி காவல் துறையினா் தாங்கள் தோ்ந்தெடுத்த ஆதாரங்களை மட்டும் அளிக்காமல் சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் விசாரணை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து விசாரணையை நியாயமாக நடத்துவது காவல் துறையின் பிரதான கடமையாகும். ஆதாரத்தை மதிப்பிடும் அதிகாரம் காவல் துறைக்கு இல்லை. அது நீதிமன்றத்தின் பணியாகும். இதனால், செஷன்ஸ் நீதிமன்றம் 2019, ஜூலை 24-இல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் 2018, பிப்ரவரி 21-இல் பெறப்பட்ட சா்ச்சைக்குரிய வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். மேலும், அதே தேதியில் காவல் நிலையத்தில் ஜெயினிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதாக காட்டும் வழக்கு டைரியை விசாரணை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால், அரசுத் தரப்பு 2018, பிப்ரவரி 21-இல் வாக்கமூலம் பதிவு செய்யப்படவில்லை என காவல் துறை தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக வழக்கு டைரி குறிப்பிடுகிறது. இதனால், காவல் துறையின் நிலைப்பாடு முரண்படுவதால் அதை ஏற்க முடியாது என உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT