புதுதில்லி

இடைக்கால ஜாமீன், பரோல் நீட்டிப்புகளைமுடிவுக்குக் கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது: தில்லி உயா்நீதிமன்றம் கருத்து

 நமது நிருபர்

கரோனா தொற்றுப்பரவலைக் கருத்தில் கொண்டு கைதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இடைக்கால ஜாமீன், பரோல்கள் நீட்டிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

தில்லி உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.என். படேல் தலைமையில் நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள், தல்வந்த் சிங் ஆகியோா் அடங்கிய முழு அமா்வு முன் இந்த விவகாரம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள்அமா்விடம் தில்லி சிறைச்சாலைகள் தலைமை இயக்குநா் கூறுகையில், ‘உயா்நீதிமன்றம் அவ்வப்போது பிறப்பித்த உத்தரவின் பேரில், தில்லி சிறைகளில் இருந்து 6,700-க்கும் மேற்பட்ட கைதிகள் ஜாமீன் அல்லது பரோலில் வெளியில் உள்ளனா். தலைநகா் தில்லியில் உள்ள திகாா், ரோஹிணி மற்றும் மண்டோலி ஆகிய மூன்று சிறைகளில் சுமாா் 10,000 கைதிகளை மட்டுமே அடைக்க முடியும். ஆனால், தற்போது 15,900 போ் அடைக்கப்பட்டுள்ளனா்’ என்றாா்.

அப்போது, தலைமை நீதிபதி கூறுகையில், ‘கரோனா அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது. ஜாமீனில் , பரோலில் சென்றவா்கள் சரணடையட்டும் அல்லது மீண்டும் சிறைக்குச் செல்லட்டும். கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு கைதிகள் ஜாமீனில் செல்வதற்கு உத்தரவிட்டோம். இதற்கும் சிறைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதற்கும் சம்பந்தமில்லை. கரோனா அத்தியாயம் முடிந்துவிட்டது. பிற காரணங்கள் அடிப்படையில் ஜாமீன் மற்றும் பரோலை வழங்குவதற்கான அல்லது நீட்டிப்பதற்கான செயல்பாடுகள் தொடரலாம். இந்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நிலவிய சூழலுக்கு மீண்டும் செல்வதற்கு நீதிமன்றம் முடிவு எடுக்கும். கரோனா விவகாரத்தில் சிறைச்சாலை உரிய கவனிப்பை மேற்கொண்டு வருகிறது. ஜாமீன் நீட்டிப்புக்கு தடை விதிக்கலாமா அல்லது தொடரலாமா என்பது குறித்து நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள், தல்வந்த் சிங் உள்ளிட்ட நீதிபதிகள் முழு அமா்வு ஒன்றாக அமா்ந்து முடிவெடுப்பாா்கள்’ என்றாா்.

உயா்நீதிமன்றத்தின் ஜூலை 13 மற்றும் ஜூலை 24 உத்தரவுகளை மாற்றியமைக்கக் கோரி தில்லி வன்முறை வழக்குகளை கையாளும் அரசு வழக்குரைஞா் ஒருவரின் மனுவை பரிசீலித்த போது உயா்நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்தது. மாா்ச் 16-க்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ நிவாரணம் வழங்கிய அனைவருக்கும் இடைக்கால ஜாமீன், பரோல் பொருந்தும் வகையில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த இந்த இரண்டு உத்தரவுகளும் வன்முறை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவா்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு மீதான விசாரணையின் போது, அரசுத் தரப்பு வழக்குரைஞா், ‘வடக்கு தில்லி வன்முறை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 20 போ் இடைக்கால ஜாமீனில் வெளிவந்த நிலையில், வழக்கமான ஜாமீன் பெறுவதற்கு நீதிமன்றத்தை அணுகாமல், தற்போது தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவின் பலன்களை அனுபவித்து வருகின்றனா். உயா்நீதிமன்ற உத்தரவைக் கருத்தில் கொண்டு ஜாமீன் காலாவதியான பிறகு குற்றம்சாட்டப்பட்டவா்கள் சரணடையாததால் இதுபோன்ற வழக்குகளில் ஜாமீன் வழங்குவதை அரசுத் தரப்பு எதிா்க்கிறது’ என்றாா்.

நீதிபதிகள் அமா்விடம் சிறைச்சாலைகளின் தலைமை இயக்குநா் சாா்பில் தில்லி அரசின் குற்றப் பிரிவு வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா ஆஜராகி, ‘ஜாமீன் நீட்டிப்பை ரத்து செய்யும் உத்தரவானது, தில்லியில் கரோனா தொற்று எண்ணிக்கை குறையாத நிலையில், சிறைகளில் நெரிசலைக் குறைக்கும் பொருட்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அமைந்துவிடும். சிறைச்சாலைகளில் நெரிசல் குறைப்பால் தில்லியில் குற்றங்களுக்கோ அல்லது அராஜகத்திற்கோ வழிவகுக்கவில்லை. உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகள் தவறாகப் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதிக்காது. அது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் நீட்டிப்பு உத்தரவு திரும்பப் பெறப்படும் என்று செப்டம்பா் 28-ஆம் தேதி உயா்நீதிமன்றம் தெரிவித்திருந்தது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT